» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓடும் பஸ்சில் நெஞ்சுவலியால் டிரைவர் திடீர் மரணம் : பயணிகள் அதிர்ச்சி!

சனி 24, மே 2025 8:43:04 AM (IST)



சத்திரப்பட்டி அருகே ஓடும் பஸ்சில் நெஞ்சுவலி ஏற்பட்டு டிரைவர் பரிதாபமாக இறந்தார். சாமர்த்தியமாக பிரேக் பிடித்து பஸ்சை கண்டக்டர் நிறுத்தியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சத்திரப்பட்டி வழியாக தா.புதுக்கோட்டை கிராமத்துக்கு தினமும் 2 முறை தனியார் பஸ் இயக்கப்படுகிறது. அதன்படி பழனி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் தா.புதுக்கோட்டைக்கு தனியார் பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

பழனியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரபு (வயது 30) என்பவர் பஸ்சை ஓட்டினார். பச்சலநாயக்கன்பட்டியை சேர்ந்த விமல்குமார் (27) கண்டக்டராக பணிபுரிந்தார்.

பழனி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த பஸ், காலை 11 மணியளவில் சிந்தலவாடம்பட்டி பஸ் நிறுத்தத்தை வந்தடைந்தது. அங்கு பயணிகள் சிலர் இறங்கினர். இதேபோல் தா.புதுக்கோட்டைக்கு செல்வதற்காக பஸ்சில் சிலர் ஏறினர். இதையடுத்து மீண்டும் பஸ் புறப்பட்டது. சிந்தலவாடம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 100 அடி தூரம் சென்றபோது, டிரைவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்து போன அவர், இருக்கையின் பக்கவாட்டில் சரிந்து விழுந்தார்.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையை விட்டு விலக தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், உயிர் பயத்தில் கத்தி கூச்சல் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு கண்டக்டர் விமல்குமார் பஸ்சின் முன்னால் ஓடி வந்தார்.

பின்னர் அவர், சாமர்த்தியமாக செயல்பட்டு தனது கைகளால் பிரேக்கை பிடித்து வேகமாக அழுத்தினார். இதனால் பஸ் சாலையோரத்தில் நின்றது. அப்போது பஸ்சுக்குள் டிரைவரின் இருக்கை அருகே நின்றுகொண்டிருந்த சில பெண்கள் தடுமாறி கீழே விழுந்தனர். ஆனால் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் பெரும் விபத்து ஏற்படுவதும் தடுக்கப்பட்டது.

இதற்கிடையே மயக்கம் அடைந்த டிரைவர் பிரபுவை அவர்கள் ஆசுவாசப்படுத்தினர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அதில் இருந்த மருத்துவ குழுவினர் பிரபுவை பரிசோதனை செய்தனர்.

அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பயணிகள் வாடகை வாகனங்கள் மூலம் தா.புதுக்கோட்டைக்கு சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பிரபுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஓடும் பஸ்சில் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழனியில் இருந்து தா.புதுக்கோட்டைக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ்சில் டிரைவர் இருக்கைக்கு அருகில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமராவில் டிரைவர் பஸ்சை இயக்கிக்கொண்டிருக்கும் போதே மயக்கம் ஏற்பட்டு இருக்கையைவிட்டு சரியும் காட்சிகளும், அவருக்கு வலிப்பு ஏற்பட்டுவிட்டதோ என நினைத்து பயணிகள் இரும்பு கம்பிகளை கொடுக்கும் காட்சிகளும், கண்டக்டர் ஓடி வந்து கைகளால் பிரேக்கை பிடித்து பஸ்சை நிறுத்தும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைராகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory