» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் ஜமாபந்தி: ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது!

வெள்ளி 14, ஜூன் 2024 3:48:26 PM (IST)அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற  ஜமாபந்தி முகாமில் 107 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி முன்னிலையில் இன்று (14.06.2024) நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய ஆறு வட்டங்களுக்கு 1433-ம் பசலிக்கான கிராம கணக்குகளை சரிபார்க்கும் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் நிகழ்ச்சியானது இந்த வருடம் ஜூன் மாதம் 11 முதல் 14-ம் தேதி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி குறுவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி கிராமம், லீபுரம் கிராமம், அகஸ்தீஸ்வரம் கிராமம், கோவளம் கிராமம், அழகப்பபுரம் கிராமம், அஞ்சுகிராமம் கிராமம், கொட்டாரம் கிழக்கு கிராமம், கொட்டாரம் மேற்கு கிராமம், வடக்கு தாமரைகுளம் கிராமம், தெற்கு தாமரைகுளம் கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 107 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும், கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் மாவட்ட ஆட்சியரால் தணிக்கை செய்யப்பட்டது.

ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி நடவடிக்கையாக 6 பயனாளிகளுக்கு பட்டா உட்பிரிவும், 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் மற்றும் 1 பயனாளிக்கு நலிந்தோர் குடும்ப நலத்திட்ட உதவி ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வருவாய் அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர் (ச.பா.தி) செந்தில்வேல்முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெங்கின் பிரபாகர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் விஜய மீனா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஜி.பி.அனில்குமார், உசூர் மேலாளர் (நிதியியல்) ஜூலியன் பீவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory