» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தியாகிகள் வரலாறு மறைக்கப்படுகிறது: துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் வேதனை

புதன் 29, மே 2024 4:31:58 PM (IST)

''மாநில பாடத் திட்டத்தில் திராவிட தலைவர் மற்றும் இயக்க வரலாறே நிறைந்துள்ளது; இது மட்டுமே வரலாறு இல்லை,'' என, ஆளுநர் ரவி பேசினார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலை துணை வேந்தர்களின், 3ம் ஆண்டு மாநாட்டின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. அதில், மாநில ஆளுநர் ரவி பங்கேற்று பேசியதாவது: நம் நாட்டில், கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. எனவே, இங்குள்ள பல்கலைக்கழகங்களை மேம்படுத்தும் விதமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள் நோக்கி செயல்பட வேண்டும்.

இங்குள்ள மாணவர்கள் மத்தியில் உயர் கல்வி, வேலைவாய்ப்பு, எதை படிக்க வேண்டும் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. கல்வியாளர்கள் மாணவர்களை வழிநடத்த வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. 50 சதவீத காலிபணியிடங்கள் உள்ளன. பல கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் தான் பாடம் நடத்துகின்றனர். மாநில பாடத்திட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வேலு நாச்சியார் போன்ற ஒரு சில சுதந்திரப் போராட்ட தியாகிகள் வரலாறு மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் பிற சுதந்திரப் போராட்ட தியாகிகள், இயக்கங்கள் குறித்த வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இது எனக்கு வேதனை அளிக்கிறது. அதேபோல் தலித் தலைவர்களை பற்றி அதிக வரலாறுகள் இல்லை. ஆனால், திராவிட தலைவர் மற்றும் இயக்க வரலாறே நிறைந்துள்ளது. இது மட்டுமே வரலாறு இல்லை. வரலாற்றை மறைப்பது அவமதிப்பதாகும். உயர்கல்விப் பயிலும்மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களான ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, 'நானோ' தொழில்நுட்பம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் அறிய வேண்டும்.

வரும் காலங்களில் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் உலகில் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவர். நம் நாடு முன்னேறி வரும் நாடாக உள்ளது. மத்திய அரசின் செயல் திட்டங்கள் சிறப்பாக உள்ளன. தமிழகத்தில் உள்ள மாணவர்கள் திறமையானவர்கள். இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பர். அவர்களை நீங்கள் சரியான வழியில் வழி நடத்த வேண்டும். இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory