» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதிய அணைகட்டும் கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்: டி.டி.வி.தினகரன்
திங்கள் 20, மே 2024 5:23:57 PM (IST)
புதிய அணைகட்டும் கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே பெருகுடா எனும் இடத்தில் தடுப்பணையை கட்டி தமிழ்நாட்டின் பிரதான அணையான அமராவதி அணைக்கு வரும் நீரை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் வாயிலாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, நூற்றுக்கும் அதிகமான கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது கேரள அரசால் கட்டப்படும் இந்த புதிய அணையால் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குடிநீர் தயாரிப்பு ஆலைக்காக கட்டப்படுவதாக கூறப்படும் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து ஆற்றுப்படுகை முழுவதும் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
அமராவதி ஆற்றின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பகுதிகளில் தமிழக அரசுக்கு தெரியாமல் கேரள அரசு அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத பட்சத்தில், கூட்டணி தர்மத்திற்காக கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் அடகு வைக்கப்படுகிறதா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது.
எனவே, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதியையும், பல லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்துவரும் அமராவதி அணையின் குறுக்கே புதிய அணைகட்டும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் சேர்த்து மாநில உரிமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.