» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தஞ்சையில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரம் பக்தர்கள் குவிந்தனர்!!

சனி 20, ஏப்ரல் 2024 9:53:35 AM (IST)



தஞ்சாவூரில் பெரியகோயில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவந்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இத்தேர் சிதிலமடைந்ததால் தேரோட்டமும் நின்று போனது.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசுப் புதிய தேர் செய்து கொடுத்ததன் மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப். 6 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் காலையிலும், மாலையிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

இதில், 15 ஆம் திருநாளான சனிக்கிழமை காலை திருத்தேரோட்டத்தையொட்டி, கோயிலில் காலை ஸ்ரீ தியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீ தியாகராஜர், கமலாம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர்.

இதைத்தொடர்ந்து, காலை 7.15 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாநகராட்சி ஆணையர் இரா. மகேஸ்வரி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, சமய அறநிலை துறை இணை ஆணையர் சு. ஞானசேகரன், உதவி ஆணையர் கோ. கவிதா, சூரியனார் கோவில் ஆதின ஸ்ரீ கார்யம் சுவாமிநாத சுவாமி தேசிகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலில் விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்கள் முன்னே புறப்பட்டுச் செல்ல, தியாகராஜர் - கமலாம்பாள் எழுந்தருளிய திருத்தேரும் சென்றது. அதைத்தொடர்ந்து, நீலோத்பலாம்பாள், சண்டீகேசுவரர் சப்பரங்கள் செல்கின்றன. தேருக்கு முன்னே சிவ வாக்கியங்கள் முழக்கமிடுகின்றன.

மேலும், பக்தர்கள் வசதிக்காகவும், சுவாமி தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் மேல வீதியில், சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையார் கோயில், இரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் நின்று செல்கின்றன.

மேலும், தேரோடும் 4 வீதிகளிலும் சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களிலும் தன்னார்வலர்கள் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் அமைத்து வழங்கி வருகின்றனர். இவ்விழாவையொட்டி, ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory