» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திரிவேணி சங்கமம் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆட்சியர் பங்கேற்பு!
புதன் 17, ஏப்ரல் 2024 12:39:10 PM (IST)
குமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் கலந்து கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரை பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் இன்று (17.04.2024) நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர். கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தி தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் மற்றும் சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பர பதாகைகள், துண்டு பிரசுரங்கள், வீடியோ வாகனங்கள், செல்பி பாயிண்ட், கிராமிய நடனங்களுடன் கூடிய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள், தோற்பாவை கூத்து உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்கள் மூலமாகவும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரை பகுதியில் முதல் வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள், சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் வண்ண பலூண்களை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்லுரி மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.