» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலீஸ் வாகனம் மோதி தி.மு.க. நிர்வாகி பலி: உறவினர்கள் சாலை மறியல்-பரபரப்பு!!

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 11:04:17 AM (IST)சுரண்டையில் போலீஸ் வாகனம் மோதி தி.மு.க. நிர்வாகி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் சுப்பிரமணியன் (43). இவர் தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக இருந்தாா். மேலும் கலிங்கப்பட்டி கிராமத்தில் கோழிப் பண்ணையும் நடத்தி வந்தார். நேற்று மாலை 4 மணி அளவில் சுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் பொருட்கள் வாங்குவதற்காக சுரண்டைக்கு வந்து கொண்டு இருந்தார்.

சுரண்டை-சேர்ந்தமரம் சாலையில் அண்ணாநகர் பகுதியில் வலது பக்கம் மோட்டாா் சைக்கிளில் திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த போலீஸ் வாகனம், சுப்பிரமணியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியன் பேச்சிமூச்சின்றி கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுப்பிரமணியனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிேசாதித்த டாக்டர்கள், சுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சுப்பிரமணியனின் உறவினர்கள் சுரண்டை பஸ் நிலையம் முன் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் எஸ்பி ரமேஷ், ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பர்னபாஸ், ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் சுரண்டை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமுக முடிவு ஏற்படாததால் உறவினர் அங்கிருந்து புறப்பட்டு சுரண்டை அண்ணா சிலை அருகில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விபத்து நடந்தபோது போலீசார் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர். இதை கண்டித்து நாங்கள் மறியலில் ஈடுபடுகிறோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் சுரண்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

விபத்தில் பலியான சுப்பிரமணியனுக்கு மகேஸ்வரி (38) என்ற மனைவியும், விஜய் முகிலன் (9), முரளி கார்த்திக் (4) ஆகிய மகன்களும் உள்ளனர். இந்த விபத்து குறித்து சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் வாகனம் மோதி தி.மு.க. நிர்வாகி பலியான சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory