» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநள்ளாறில் பெருமாள் கோவில் கொடிமரம் முறிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!!

திங்கள் 4, மார்ச் 2024 8:27:02 AM (IST)திருநள்ளாறில் நளநாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தின்போது கொடி மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நளநாராயண பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று காலை வாஸ்து சாந்தி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற இருந்தது. இதற்காக ஸ்ரீதேவி, பூதேவி சமேத நளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருளினார். பின்னர் பட்டாச்சாரியார்கள் சிறப்பு ஹோமம் நடத்தி வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றினர்.

அப்போது கொடிமரம் திடீரென முறிந்து விழுந்தது. அப்போது கொடி அறுந்து தரைத்தளத்தில் விழுந்தது. அதே வேளையில் முறிந்து கொடிமரத்து துண்டு மட்டும் கட்டிடத்தின் மேற்பகுதியில் விழுந்தது. இதனால், பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. திருவிழா தொடங்க இருந்த நிலையில் கொடிமரம் முறிந்து விழுந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் பக்தர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியது. அத்துடன் கொடிமரத்தை முறையாக பராமரிக்கவில்லை என்று கூறி பூமங்கலம், பேட்டை, அத்திப்பிடிகை, கீழாவூர், காக்கமொழி ஆகிய 5 ஊர் பொதுமக்கள் கோவில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் அங்கு வந்து பார்வையிட்டார். கொடிமரம் முறிந்து விழுந்ததால் தொடர்ந்து விழாவை நடத்தலாமா? வேண்டாமா? அசம்பாவிதம் ஏதும் ஏற்படுமோ? என பக்தர்கள் அச்சத்தில் உறைந்தனர். இருப்பினும் விழாவை திட்டமிட்டப்படி நடத்த நிர்வாகம் முடிவு செய்தது.

பின்னர் கொடிமரம் அருகே புதிதாக சிறிய கொடிமரம் அமைக்கப்பட்டது. பின்னர் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா தொடர்ந்து வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. பிரம்மோற்சவ விழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தபோது கொடிமரம் முறிந்து விழுந்த சம்பவம் திருநள்ளாறில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory