» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் தி.மு.க. பெண் கவுன்சிலர் திடீர் ராஜினாமா: ஆணையர் விளக்கம்!

வெள்ளி 1, மார்ச் 2024 5:15:27 PM (IST)

நெல்லை மாநகராட்சி 7வது வார்டில் பணிகள் நடைபெறவில்லை என்று கூறி  தி.மு.க. பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.. 

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் இந்திரா. இவர் இன்று தனது கணவரும், தி.மு.க. நிர்வாகியுமான சுண்ணாம்பு மணி மற்றும் அப்பகுதி மக்களுடன் வந்து மாநகராட்சி கமிஷனரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பாளை மனக்காவலன்பிள்ளை நகர் 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 5 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்கள் பகுதியில் சாலைகள் அமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த ஆண்டு சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. பொதுமக்களின் தொடர் கோரிக்கை காரணமாக கடந்த வாரம் சாலை அமைப்பதற்காக மீண்டும் பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை. எனவே உடனடியாக எங்கள் பகுதியில் சாலை அமைக்க கோரி நேற்று எங்கள் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டோம். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்தல் நேரம் என்பதால் சாலை அமைக்கும் பணி பின்னர் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்களிடம் விளக்கம் கூற முடியவில்லை. எனவே எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மனு கொடுக்க வந்த கவுன்சிலர் இந்திரா மற்றும் அவரது கணவர் சுண்ணாம்பு மணி ஆகியோரை கமிஷனரை சந்திக்க காத்திருக்குமாறு கூறினர். உடனே அவர்கள் இருவரும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன்பிறகு கமிஷனரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினர். 

மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

இதுகுறித்து மாநகராட்சி  ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்  கூறுகையில், 7வது வார்டில் பணிகள் நடைபெறவில்லை என்பது தவறான தகவல். ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம்  பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு கோடியே 98 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் இறுதி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. ராஜினாமாவை மேயரிடமே அளிக்க வேண்டும் அவர்தான் உண்மை தன்மை அறிந்து ஏற்றுக் கொள்ளவோ நிராகரிக்கவோ முடியும் என்றார்.


மக்கள் கருத்து

BalaMar 1, 2024 - 11:15:14 PM | Posted IP 172.7*****

Ivaluga DMK le ninnu jaipangalam.. apuram BJP ku odi poiruvangalam.. Ine ival electionil nirka thadai vidhikka vendum..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory