» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேர்தல் கூட்டணி குறித்து விமர்சனங்கள் கூடாது : மதிமுகவினருக்கு வைகோ அறிவுறுத்தல்
வெள்ளி 1, மார்ச் 2024 12:50:00 PM (IST)
தேர்தல் கூட்டணி குறித்து விமர்சனங்கள் கூடாது என்று மதிமுகவினருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார்.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை கூட்டணித் தலைமையுடன் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கின்றது. இந்நிலையில், கழகத் தோழர்கள் சமூக வலைதளங்களில் தேர்தல் கூட்டணி குறித்து பதிவிடுவதும், விமர்சனங்களை முன்வைப்பதும் எனக்கு மன வேதனை அளிக்கின்றது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா காட்டிய இலட்சியப் பாதையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்க இலட்சிய வெற்றிக்காகவும், தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்கவும், தமிழ்நாட்டின் நலன்களுக்காகக் குரல் கொடுத்தும் தன்னலம் கருதாது பாடுபட்டு வரும் பேரியக்கம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்.