» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரியில் வாகன கட்டணம் இருமடங்கு வசூல்: சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிர்ச்சி
வியாழன் 30, நவம்பர் 2023 5:54:02 PM (IST)
கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீஸனை பயன்படுத்தி வாகன நுழைவுக் கட்டணம், பார்க்கிங் கட்டணம் இருமடங்கு வசூல் செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீஸன் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இந்த சீஸன் ஜனவரி 20-ம் தேதி வரை இருக்கும். இதையொட்டி கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இதை பயன்படுத்தி கன்னியாகுமரி பேரூராட்சி, சுற்றுலாத்துறை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் உட்பட பல அரசுத்துறைகளும், தனியார் துறைகளும் வருவாயை குறிவைத்து திட்டங்களை வகுத்துள்ளன.
குறிப்பாக கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் தற்காலிக கடைகள், வாகன பார்க்கிங், வாகன நுழைவுக் கட்டணம் போன்றவை பல கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஆனால் பேரூராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட இரட்டிப்பாக கட்டணம் வசூல் செய்யப் படுகிறது. கட்டண விவரத்துடன் வைக்கப்பட்டுள்ள போர்டுகளைப் பார்த்து சுற்றுலா பயணிகள், கட்டணம் வசூல் செய்வோரிடம் தகராறு செய்வதும், பின்னர் மனவேதனையுடன் அங்கிருந்து செல்வதும் அன்றாடம் நிகழ்கிறது.
இது குறித்து, கன்னியாகுமரியை சேர்ந்த சுற்றுலா ஆர்வலர் வேலவன் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீஸனை முன்னிட்டு அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. அதேநேரம் வசூல் வேட்டை நடத்துகின்றனர். அப்பட்டமாக நடைபெறும் இந்த பகல் கொள்ளையால் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வேதனை அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி சூரிய அஸ்தமன மையம், ஜீரோ பாயின்ட், கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் பேரூராட்சியின் வாகன பார்க்கிங் பகுதி உள்ளது. இது தவிர காந்தி மண்டபம் செல்லும் வழியில் சுற்றுலாத்துறையின் வாகன பார்க்கிங் உள்ளது. சீஸனை முன்னிட்டு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேன், பேருந்து, கார் ஆகியவை வருகின்றன.
கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் பார்க்கிங் கட்டணமாக சுற்றுலா பேருந்துக்கு ரூ.50, வேன்களுக்கு ரூ.30, கார்களுக்கு ரூ.20 என கட்டணம் நிர்ணயித்து, போர்டு வைத்துள்ளனர். ஆனால் ஒப்பந்தம் எடுத்தவர்கள் வசூல் செய்கின்றனர். சுற்றுலா பேரூந்திற்கு ரூ.100, வேன்களுக்கு ரூ.60, கார்களுக்கு ரூ.50 என பேரூராட்சி பெயருடன் அவர்களே ரசீது அடித்து இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கின்றனர். கன்னியாகுமரியின் நுழைவுப் பகுதியான விவேகானந்தாபுரத்தில் வாகன நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
சுற்றுலா பேருந்துக்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால குத்தகைதாரர் ரூ.200 வசூல் செய்கிறார். இதுபோலவே பிற வாகனங்களுக்கும் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் இவற்றை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளையும், பக்தர்களையும் வேதனை அடையச் செய்யும் இந்த கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த வாசகர் தெரிவித்துள்ளார். இது குறித்து கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ‘இது தொடர்பாக பலரும் புகார்களை தெரிவித்து வருகின்றனர். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.