» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக சின்னத்தை பயன்படுத்த விதித்துள்ள தடையை மீறப்போவதில்லை: ஓபிஎஸ்

வியாழன் 30, நவம்பர் 2023 5:13:25 PM (IST)

அதிமுகவின் கட்சிக் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து பிறப்பித்துள்ள உத்தரவை மீறப் போவதில்லை என்றும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறார்.இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. 

இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவர்கள் கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக வியாழக்கிழமை மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது நீதிபதி, இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்ப்பட்டுள்ளது. எனவே, தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாரயண், "தீர்ப்பு வரவில்லை என்றால், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்து வாதத்தை தொடங்கலாம். வழக்கு விசாரணையை தள்ளிவைப்பதாக இருந்தால் பன்னீர் செல்வத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும்" என்றார். அதற்கு ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை பின்பற்றி வருவதாகவும், மீறப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தடை உத்தரவை நீட்டிக்க மறுத்து, விசாரணையை டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, தடை உத்தரவை மீறக்கூடாது என அறிவுறுத்தினார். தடை உத்தரவை மீறினால் நீதிமன்ற கவனத்துக்கு கொண்டுவரும்படி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு, நீதிபதி அறிவுறுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory