» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை, தென்காசியில் மீண்டும் மழை: 110 அடியை நெருங்கியது பாபநாசம் அணை!

வியாழன் 30, நவம்பர் 2023 4:52:38 PM (IST)

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் 110 அடியை நெருங்கியது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம் மற்றும் சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலும் பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 23.4 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இதனால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. சுமார் 1 மாதமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 76.40 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 488 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 109.10 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 121 அடியாகவும் இருக்கிறது. இந்த அணைகள் நீர்மட்டங்கள் தலா ½  அடி உயர்ந்துள்ளது.

இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 920 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. பாபநாசத்தில் 12 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 11 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

களக்காடு, திருக்குறுங்குடி, நாங்குநேரி, அம்பை, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்றும் காலையில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 700 குளங்கள் நிரம்பி உள்ளதால், விவசாய பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தொடர்ந்து மழை பெய்து நீர் வரத்து அதிகரித்ததினால் இன்று தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தலையணை சூழல் சுற்றுலா பகுதிகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறை தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, பாவூர்சத்திரம், திரவியம் நகர் உள்ளிட்ட இடங்களில் இரவில் பரவலாக மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநதியில் 6 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 0.5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 78 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 77.20 அடியாகவும் உள்ளது. கருப்பாநதி, குண்டாறு அணைகள் நிரம்பி வழிகிறது. 

மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குற்றாலத்தை பொறுத்தவரை மலைப்பகுதியில் மழை பெய்தது. இதனால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு குளிர்ந்த காற்றும் வீசுகிறது. மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 37 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று இரவில் விட்டு விட்டு மழை பெய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory