» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு அமைச்சா் பொன்முடியிடம் அமலாக்கத் துறை விசாரணை

வியாழன் 30, நவம்பர் 2023 3:38:12 PM (IST)

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

செம்மண் குவாரி வழக்கு தொடர்பாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட புதிய வழக்கு விசாரணைக்கு தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, நவ.30-ஆம் தேதி மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், அவர் இன்று காலை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியிருந்தார்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நீடித்தது. அமைச்சா் க.பொன்முடி, கடந்த 2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், கூடுதல் பொறுப்பாக கனிமவளத் துறையையும் கவனித்தாா். அப்போது அவா், விழுப்புரம் மாவட்டம் வானூா் அருகே பூத்துறையில் அமைக்கப்பட்ட செம்மண் குவாரி உள்பட 5 செம்மண் குவாரிகள் தனது மகன், உறவினா், பினாமி ஆகியோா் பெயரில் எடுத்து, விதிமுறைகளை மீறி நடத்தினாா்.

செம்மண் குவாரியில் அதிக அளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28,36,40,600 இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி, உறவினா் கே.எஸ்.ராஜமகேந்திரன் உள்ளிட்டோா் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

இதைக் கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்த அமலாக்கத் துறை, பொன்முடிக்குச் சொந்தமான 7 இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை செய்தது. இது தொடா்பாக அவரிடம் 2 நாள்கள் விசாரணை நடத்தினர்.

செம்மண் முறைகேடு மூலம் ஈட்டிய பணத்தை ஹவாலா பரிவா்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ. 13 லட்சம் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட ரூ. 81,70,000 பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ. 41.90 கோடி வங்கி நிரந்தர வைப்புத் தொகை முடக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது. இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை கடந்த ஆக.23-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் 90 பக்கக் குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory