» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு:கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

புதன் 29, நவம்பர் 2023 5:21:53 PM (IST)

மழையால் புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி இன்று (புதன்கிழமை) மாலை  200 கன அடி உபரி நீர் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் அருகே பொன்னேரி பகுதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 21.20 அடி. முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். இந்த நிலையில் புதன்கிழமை நீர் இருப்பு 19.25 அடியாகவும், கொள்ளளவு 2,862 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. 

மேலும் வடகிழக்கு பருவமழையினால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் புழல் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது நீர் வரத்து விநாடிக்கு 570 கன அடியாக உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து புதன்கிழமை மாலை 4 மணிக்கு விநாடிக்கு 200 கனஅடி உபரி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் புழல் ஏரிக்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. மேலும், ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும்.

எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory