» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திங்கள் 27, நவம்பர் 2023 8:31:42 AM (IST)



திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா என்று பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இங்கு உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

திருமாலுக்கும், பிரம்மாவிற்கும் இடையே ஏற்பட்ட "தான்" என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். இந்த நாளையே இக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தனர். கடந்த 23-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக கோவில் கருவறைக்கு எதிரே உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றுவதற்காக ஏற்பாடுகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். அருணாசலேஸ்வரருக்கு தீபாராதனை செய்யப்பட்டதும், வேதமந்திரங்கள் முழங்க அதிகாலை 3.35 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். பின்னர் அதிலிருந்து பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து பரணி தீபம் கோவில் பிரகாரத்தை சுற்றி கொண்டு வரப்பட்டு வைகுந்த வாயில் வழியாக மகா தீபம் ஏற்றப்படும் மலைக்கு காட்சி கொடுக்கப்பட்டது. அங்கிருந்து உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பஞ்சமுக தீபம் ஏற்பட்டது. அம்மன் சன்னதி, சாமி சன்னதிகளுக்கு வெளியே தரிசனத்திற்காக பரணிதீபம் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு காட்டப்பட்டது. பின்னர் காலபைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது. பக்தர்கள் பரணிதீபத்தை தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஆடியபடி தனித்தனியாக வெளியே வந்து சாமி சன்னதி முன்பு உள்ள தீப மண்டபத்தில் இருந்த தங்க விமானத்தில் எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து சுமார் 6 மணியளவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கிரிவலம் சென்ற பக்தர்கள், நகரின் வீதிகள் மற்றும் வீடுகளின் மாடிகளில் நின்றிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory