» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

வியாழன் 23, நவம்பர் 2023 8:02:52 PM (IST)

குமரியில் கன மழை பெய்ததால், சாலையில் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அவற்றை கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள், மீட்புப்பணிகள் துறையினர் வெள்ள சேதங்களை தடுக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் கன மழைபெய்தது. அதைத்தொடர்ந்து பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1038 கன அடி தண்ணீர் வந்தது. அதைத்தொடர்ந்து அணையிலிருந்து உபரியாக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 355 கன அடியிலிருந்து 509 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் பாசனக் கால்வாயில் வினாடிக்கு 301 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேலும் சிற்றாறு -1 அணையிலிருந்தும் வினாடிக்கு 129 கன அடி உபரிநீர் நேற்று காலையில் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 249 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் பாசனக் கால்வாயில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, குலசேகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து உபரி நீர் கூடுதலாக திறந்து விடப்பட்ட நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 4-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது,இதனால் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியை தூரத்தில் நின்றவாறு பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்தநிலையில் பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரும் காட்டுப் பகுதிகளில் கன மழை காரணமாக பேச்சிப்பாறை - கோதையாறு சாலை, மோதிரமலை - மூக்கறைக் கல் சாலை, மோதிரமலை - வேலிப்பிலாம் சாலை போன்ற சாலைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் மோதிரமலை அருகே மூக்கறைக்கல் வளைவு சாலையில் காட்டாற்று வெள்ளம் அதிக அளவில் சென்றது.

இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும் இச்சாலை வழியாகச் சென்ற அரசு பஸ்களும் மெதுவாகவே ஊர்ந்தபடி சென்றன. இந்த நிலையில் காட்டாற்று வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து செல்வதை தடுக்க ஓடைகளை சரி செய்ய வேண்டும் என்று மோதிரமலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கடல் அணையை பொறுத்த வரையில் கடந்த மாதம் 23-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதைத் தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் மறுகால் பாய தொடங்கியது. அந்த வகையில் கடந்த 31 நாட்களாக அணையில் இருந்து தண்ணீர் மறுகால் பாய்கிறது. அந்த வகையில் நேற்று வினாடிக்கு 8.6 கனஅடி தண்ணீர் மறுகால் பாய்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory