» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பட்டா கேட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி: ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

திங்கள் 2, அக்டோபர் 2023 4:45:58 PM (IST)



நாகர்கோவிலில் இன்று பட்டா கேட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு அருந்ததியர் தெருவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கையை நீண்ட நாட்களாக முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவும் அளித்து உள்ளனர். மேலும் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அருந்ததியர் தெருவை சேர்ந்த மக்கள் பட்டா கேட்டு அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெருவில் இருந்து பேரணியாக சாலையை நோக்கி வந்தனர். அவர்கள் சாலையோரம் நின்ற படி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திடீரென ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த வடசேரி போலீசார் மறியல் செய்ய அனுமதி இல்லை என கூறினர். ஆனாலும் மக்கள் தொடர்ந்து சாலை மறியல் நடத்தினர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் ராஜேஷ், நாகர்கோவில் டிஎஸ்பி நவீன்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ராமர், திருமுருகன், அருண் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் மறியலை பொதுமக்கள் கைவிடவில்லை.

அப்போது மறியிலில் ஈடுபட்ட 30 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தற்கொலைக்கு முயன்றார். அவர் மண் எண்ணெய்யை தனது உடல் முழுவதும் ஊற்றினார். இதனை கண்ட போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து கேனை பிடுங்கினர். மேலும் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் மறியலில் ஈடுபட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றினர். மேலும் மறியல் செய்த ஆண்களை ஒரு மினிபஸ்சில் ஏற்றினர். அப்போது மினிபஸ்சில் மறியல்காரர்கள் ஏற மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்ட ஆண்களுக்கும் இடையே தகராறுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மறியல்காரர்கள் சாலையில் கிடந்த கற்களை எடுத்து மினி பஸ் மீதும், போலீசார் மீதும் வீசத் தொடங்கினர். இதில் மினிபஸ்சின் முன் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும் கல்வீச்சில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீஸ்காரர் ஜோஸ் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலை கட்டுக் கடங்காமல் சென்றதால், மறியல்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 

போலீசாரின் தடியடிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மறியலில் ஈடுபட்ட ஆண்கள் நாலாபுற மும் சிதறி ஓட தொடங்கினர். போலீசாரின் தடியடியில் குமார், கிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனர். இதில் போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து தப்பி ஓடிய நபர்களை போலீசாா் தேடி வருகிறார்கள். போலீசாரின் தடியடியால் கிருஷ்ணன்கோவில் சாலை பகுதி போர்களமாக கட்சி அளித்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory