» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கு கிரீஷ்மாவுக்கு ஜாமீன் மறுப்பு!

சனி 3, ஜூன் 2023 3:27:51 PM (IST)


குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா (22). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் என்பவரை காதலித்துள்ளார். காதலியுடன், திற்பரப்பு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற ஷாரோன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அதே மாதம் 25-ந்தேதி ஷாரோன் பரிதாபமாக இறந்தார். தனது மகன் சாவுக்கு, கிரீஷ்மா தான் காரணம் என, ஷாரோனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், காதலன் ஷாரோனுக்கு, காதலி கிரீஷ்மா, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்திற்கு உதவியாக செயல்பட்டதாக, கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமா நிர்மல் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நெய்யாற்றின்கரை கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த கோர்ட்டு, சிந்து மற்றும் நிர்மல்குமாருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் கிரீஷ்மாவுக்கு ஜாமீன் வழங்கவில்லை. இதனால், அவர் கடந்த 7 மாதங்களாக திருவனந்தபுரம் அட்ட குளங்கரை பெண்கள் சிறையிலேயே உள்ளார்.

இந்த நிலையில், ஜாமீன் கேட்டு நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் கிரீஷ்மா மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வித்யாதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார், கிரீஷ்மாவுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கிரீஷ்மாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory