» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: பழ. நெடுமாறன்

திங்கள் 13, பிப்ரவரி 2023 11:56:04 AM (IST)

தமிழீழத் தேசியத் தலைவர்  பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  "நம்முடைய தமிழக தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச சூழலும் ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பிய இலங்கை மக்களின் போராட்டமான இந்த சூழலில் தமிழ் தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. 

இந்த சூழலில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இந்தச் செய்தி மூலம் உறுதியான முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்.

தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன். விடுதலை புலிகள் வலிமையாக இருந்த காலம்வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதுவாக இருந்தாலும், எந்த காலகட்டத்திலும் அவர்களிடமிருந்து எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழின தேசிய தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்.

இப்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவுக்கு எதிரான களமாக மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்து மகாகடலின் சீனாவின் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதனை தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழின தேசிய தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டி கேட்கிறோம்.

பிரபாகரனின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியின் பேரில் இங்கே வெளியிடுகிறேன். எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என்பது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உலகம் முழுவதும் உள்ள நம்முடைய தமிழர்களுக்கும் ஆவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.ஆனால், விரைவில் அவர் வெளிப்படுவார். அதை உலகம் அறிந்து கொள்ளும் எனத் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது கவிஞர் காசி ஆனந்தன், உலகத் தமிழர் பேரமைப்பு துணைத் தலைவர் அய்யனாபுரம் சி. முருகேசன், வழக்குரைஞர் அ. நல்லதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர். கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ஆனந்த்Feb 13, 2023 - 01:08:11 PM | Posted IP 162.1*****

நேதாஜியையும் இப்படிதான் சொன்னார்கள் அட போங்கப்பா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory