» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

களக்காடு மலையடிவாரத்தில் வனவிலங்கு வேட்டை: தோட்ட காவலாளி கைது!

வெள்ளி 25, நவம்பர் 2022 12:23:46 PM (IST)

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வனத்துறை துணை இயக்குநர் ரமேஷ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து மாறுவேடத்தில் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், கீழவடகரையில் உள்ள ஒரு குளத்துப்பகுதியில் கரடியின் உடல் புதைக்கப்பட்டு உள்ளதாக   தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று தோண்டி பார்த்த போது கரடியின் எலும்பு கூடு மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. கால்நடை மருத்துவர் குழுவினர் ஆய்வில் அந்த கரடி உயிரிழந்து 15 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று தெரிய வந்தது. இதுபற்றி வனத்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. 

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘கீழவடகரை மலையடிவாரத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் ஒரு கும்பல் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளது. மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கரடியை தான் அந்த கும்பல் குளத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர். மின்வேலி மூலம் கடமான், பன்றி, முயல், உடும்பு உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி கறியை பங்கு போட்டு வந்துள்ளனர். 

பல ஆண்டுகளாக இந்த வேட்டை தொடர்ந்துள்ளது. மின்வேலியில் கரடி போன்ற விலங்குகள் சிக்கி பலியானால் ரகசியமாக புதைத்ததும் அம்பலமாகியுள்ளது’ என்றனர். இந்த வேட்டை கும்பலின் வலையில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக தோட்டக் காவலாளியான நாகன்குளத்தை சேர்ந்த கணேசன் (54) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் கறியை முக்கிய பிரமுகர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் பங்கு போட்டது தெரியவந்தது. இதையடுத்து விசாரணைக்கு பின் கணேசனை வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளை  சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள  20க்கும் மேற்பட்டோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory