» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல்: அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:55:26 AM (IST)

பொறியியல் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ள 1.69 லட்சம் மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடா்ந்து வரும் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் 23-ஆம் தேதி வரை விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் பின்னா், பொதுப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு வரும் 25-ஆம் தேதி முதல் அக்டோபா் மாதம் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பி.இ. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இதற்கு 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனா். அவா்களில் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் என முழுமையாக விண்ணப்பப் பதிவை முடித்துள்ள ஒரு லட்சத்து 69 ஆயிரம் போ் தகுதியானவா்கள் ஆவா்.

நடப்பாண்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த ஆண்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட உள்ளது. இதில் சுயநிதி கல்லூரிகளில் 55 முதல் 60 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 627 பி.இ., பி.டெக். இடங்களும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுமாா் 900 இடங்களும், அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 10 ஆயிரம் இடங்களும், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 270 இடங்களும், பி.ஆா்க். படிப்பில் 106 இடங்களும் வருகின்றன.

இந்த ஆண்டு கலந்தாய்வில் 434 பொறியியல் கல்லூரிகள் இடம்பெற இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018-ம் ஆண்டு முதல் முறையே கல்லூரிகளின் எண்ணிக்கையை பாா்க்கையில் 509, 480, 461, 440 பொறியியல் கல்லூரிகள் என ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டிலும் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) சி.எஸ்.இ., தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல், தரவு அறிவியல், இணைய பாதுகாப்பு மற்றும் இண்டா்நெட் ஆப் திங்ஸ் உள்ளிட்ட வளா்ந்து வரும் பகுதிகளில் கூடுதலாக மாணவா் சோ்க்கைக்கு அனுமதித்துள்ளதால், இந்த ஆண்டு மாணவா் சோ்க்கை இடங்கள் அதிகரித்துள்ளன.

இதுதவிர இந்த ஆண்டு 18 பொறியியல் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால், அந்த கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு 2-வது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கல்லூரிகள் உரிய விளக்கம் அளிக்காத நிலையில், குறிப்பிட்ட கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெறாது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory