» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சீமானை மக்கள் தேர்ந்தெடுத்திருந்தால் கூட மகிழ்ச்சி : மார்க்கண்டேயன் எம்எல்ஏ பேச்சு

புதன் 20, மே 2026 8:21:24 AM (IST)



மக்கள் சேவை செய்யாமல் சினிமாவை மட்டுமே நம்பி அரசியலுக்கு வந்தவர்களுக்குப் பதிலாக,  மண்ணின் அனைத்து உயிர்களுக்கான அரசியலையும் தொடர்ந்து பேசி வரும் சீமானை மக்கள் தேர்ந்தெடுத்திருந்தால் கூட நான் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்" என்று மார்க்கண்டேயன் எம்எல்ஏ பேசினார்.

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள ஜீ.வி. மார்க்கண்டேயன், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாகத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது: "விளாத்திகுளம் தொகுதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து மூன்றாவது முறையாக என்னைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நான் கடந்த காலங்களில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்ததை விட, தற்போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்து மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும், குறைகளையும் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலித்து, தொகுதி மக்களுக்குச் மிகச் சிறப்பாகப் பணியாற்றுவேன் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தேர்தல் களத்தில் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அனைத்துப் பலன்களையும் பெற்று வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினர், தற்போதைய ஆட்சி மாற்றச் சூழலில் திமுகவின் முதுகில் குத்திவிட்டனர். காங்கிரஸ் கட்சி இவ்வாறு திமுகவிற்குப் பச்சை துரோகம் இழைப்பது இது முதல் முறையல்ல, இதோடு தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர்கள் நமக்குத் துரோகம் செய்துள்ளனர்.

அரசியல் அனுபவமே இல்லாமல், வெறும் சினிமா வாழ்க்கையை மட்டுமே முழுமையாக நம்பி இருந்தவர்களுக்கு மக்கள் வாக்களித்து, தற்போது ஒரு புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துள்ளது மிகவும் வேடிக்கையாக உள்ளது. மக்கள் சேவை செய்யாமல் சினிமாவை மட்டுமே நம்பி அரசியலுக்கு வந்தவர்களுக்குப் பதிலாக, அடிமட்ட மக்கள் பிரச்சினைகளையும், முறையான அரசியல் கட்டமைப்பையும், மண்ணின் அனைத்து உயிர்களுக்கான அரசியலையும் தொடர்ந்து பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் நல்லவர். இந்த மக்கள் அவருக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்திருந்தால் கூட நான் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்" என்று பேசினார்.

இக்கூட்ட நிகழ்வில், விளாத்திகுளம் மத்திய ஒன்றியச் செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றியச் செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத் தலைவர் சூர்யா அய்யன்ராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு உள்ளிட்ட கழக முன்னிலை நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory