» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபர் வெட்டிக்கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்!

திங்கள் 23, பிப்ரவரி 2026 7:40:14 AM (IST)

எட்டையாபுரம் அருகே குடும்பத்துடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று திரும்பிய வாலிபரை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் தெற்கு காலங்கரை கிராமத்தைச் சேர்ந்த ஊர்க்காவலன் என்பவரது மகன் பெரியநாயகம் (33). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், குழந்தையின் மொட்டை மற்றும் காதுகுத்து விழாவிற்காக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு பெரியநாயகம் தனது டாடா ஏஸ் வாகனத்தில் குடும்பத்துடன் தூத்துக்குடி நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தார். 

எட்டையாபுரம் அருகே உள்ள கீழ ஈரால் கிராமத்தில் வாகனத்தைச் சாலையோரம் நிறுத்திவிட்டு அவர் அமர்ந்திருந்தார்.  அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள கடையில் இனிப்பு மற்றும் காரவகைகள் வாங்கச் சென்றிருந்தனர். அந்த நேரத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் பெரியநாயகத்தைச் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலைக் கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். 

தனது மனைவி மற்றும் உறவினர்களின் கண் முன்னே பெரியநாயகம் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எட்டையாபுரம் காவல்துறையினர், பெரியநாயகத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள முனியசாமி மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன் விரோதத்தில் வெறிச்செயல் 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெரியநாயகத்திற்கும் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியைச் சேர்ந்த முனியசாமிக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், நேற்று காலை இருக்கன்குடியில் நடைபெற்ற கோவில் திருவிழா நிகழ்ச்சியில், உணவு பரிமாறும்போது மீண்டும் இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

உணவு பரிமாறும் இடத்தில் ஏற்பட்ட தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் கடும் ஆவேசமடைந்த முனியசாமி, தனது கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து பெரியநாயகத்தைப் பின்தொடர்ந்து வந்து இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. தற்போது எட்டையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள முனியசாமி மற்றும் அவரது கூட்டாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory