» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை துறைமுகக் கொள்கை முழுமையாக அறிமுகம்!

வெள்ளி 16, மே 2025 11:39:23 AM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முழுமையான பசுமை துறைமுகக் கொள்கையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் துறைமுகமாக மாறியுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக மேல்கூரை சூரியமின்னாலை மூலம் சூரியஒளி மின் உற்பத்தி திறனில் 1 மெகாவாட்டை கடந்து வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் பல்வேறு பசுமைத் திட்டங்களைச் செயல்படுத்துவதின் மூலம் தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறது. அதன் ஒரு பகுதியாகஇ சுத்தமான ஆற்றலை உருவாக்குவதற்கு 5 மெகாவாட் தரைதள சூரியமின்னாலை, 2 மெகாவாட் காற்றாலை மற்றும் 1.04 மெகாவாட் மேல்கூரை சூரியமின்னாலைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது. 

கூடுதலாக, 1 மெகாவாட் தரைதள சூரியமின்னாலை கட்டுமானப் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2024-25 நிதியாண்டு புதுப்பிக்கபட்ட எரிசக்தி மூலம் 12.65 மில்லியன் அலகுகள் பசுமை ஆற்றலை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது, இதன் மூலம் தோராயமாக 10.37 மில்லியன் கிலோகிராம் கார்பன் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவிலேயே முதன்முறையாக மேல்கூரை சூரியமின்னாலை மூலம் சூரியஒளி மின் உற்பத்தி திறனில் 1 மெகாவாட்டை கடந்து வ.உ. சிதம்பரனார் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

பசுமை திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாகஇ வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மின்சாரத்தினால் இயங்க கூடிய 20 கார்களை இயக்கி அதற்கான மின்வூட்டி நிலையங்களையும் நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பெருநிறுவன சமூக பொறுப்பு கூட்டமைப்பு செயல்பாடுகளின் கீழ் இயற்கை எரிவாயுவினால் இயங்க கூடிய பள்ளி பேருந்தினை துறைமுக பள்ளிக்கு வழங்கியுள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்ப செயல்முறை ஆலை பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில்நுட்ப செயல்விளக்கமாக பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் முதல் இந்திய துறைமுகமாக விளங்குகிறது. துறைமுகத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மின்னாற்பகுப்பு செய்து அதன் மூலம் இயக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு 10 Nm³ பசுமை ஹைட்ரனை உற்பத்தி செய்யும் இந்த ஆலை, துறைமுகத்தின் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தெருவிளக்குகள் மற்றும் மின்சார வாகன மின்வூட்டி நிலையங்களுக்கும் ஹைட்ரஜன் மூலம் மின்சாரத்தை வழங்கி சுத்தமான எரிசக்தி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

நாட்டின் பசுமை ஹைட்ரஜன் இலட்சியத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் துறைமுகம், 501 ஏக்கர் நிலத்தை பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு வசதிக்காக ஒதுக்கியுள்ளது. இந்த வசதி ACME Green Hydrogen & Chemicals, Green Infra Renewable Energy Farms Pvt. Ltd. (Sembcorp), Amplus Ganges Solar Pvt. Ltd., மற்றும் Renew E-Fuels Pvt. Ltd., போன்ற நிறுவனங்களிடமிருந்து பெறும் ரூ 41,860 கோடி முதலீட்டுடன் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வளர்ந்து வரும் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரு முக்கிய பங்கு வகுத்து வருகிறது.

மேலும், துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜனை கப்பல்களுக்கு வழங்குவதற்காக சேமித்து வைக்கும் தொழில்நுட்ப செயல்முறை ஆலையும் மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதியும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களுக்கான அமைச்சகம் ரூ 35 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளது. 750 கன மீட்டர் சேமிப்புத் திறனுடன் கூடிய இந்த வசதி 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை கையாளுவதற்கு வசதியாக இரண்டு தளங்களைக் கொண்ட ஒரு பிரத்தியோகமான முனையத்தை துறைமுகம் நிறுவ உள்ளது. இந்த முனையத்தின் மூலம் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் அமைய உள்ள 20 ஜிகா வாட் காற்றாலைக்கு தேவையான இயந்திரங்களை துறைமுகத்திலிருந்து எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். மேலும் இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் கடலோர பசுமை கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை காண்ட்லா மற்றும் தூத்துக்குடிக்கும் இடையில் துவங்குவதற்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தயாராகி வருகிறது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தன் பசுமை கப்பல் போக்குவரத்து திட்டங்களின் ஒரு பகுதியாக, சர்வதேச துறைமுகங்கள் மற்றும் ஹார்பர் கூட்டமைப்பினால் சான்றளிக்கப்பட்ட சுற்றுச் சூழல் கப்பல் குறியீட்டு மதிப்பெண்களைக் கொண்ட கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணங்களில் சலுகை வழங்குகிறது. ரோட்டர்டாம் மற்றும் சிங்கப்பூரிலிருந்து பசுமை எரிபொருள் கப்பல்களை இயக்கும் நோக்கத்தில்இ துறைமுகம் பசுமை எரிபொருள் சேமிக்கும் மையமாக செயல்படுவதற்காக சர்வதேச கடல்சார் அமைப்புடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் தற்போது துறைமுகத்தில் நடைபெற்று வருகின்றது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முழுமையான பசுமை துறைமுகக் கொள்கையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் துறைமுகமாக மாறியுள்ளது. இந்த கொள்கை, பசுமை சான்றளிக்கப்பட்ட கட்டடங்கள், சரக்குகளைக் கையாளும் கருவிகளை மின்மயமாக்குதல், மின்சார வாகனங்களைப் பயன்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரித்தல், நீர் பாதுகாப்பை உறுதி செய்தல், துறைமுக வளாகத்தில் பசுமை பரப்பளவை அதிகரித்தல், நிலைத்தன்மையைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் கொள்கையின் வழக்கமான மாற்றங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், "கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் ‘ஹரித் சாகர்’ பசுமைத் துறைமுக வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது என்று கூறினார். மேலும் துறைமுகம் மற்றும் கடல்சார் துறைகளில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து ‘நிகர புஜ்ஜிய உமிழ்வு’ இலக்கை எட்டும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory