» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 28ம் தேதி மதுபான பாா்கள் மூடல் : உரிமையாளர்கள் அறிவிப்பு!

வியாழன் 13, பிப்ரவரி 2025 3:40:29 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 28ஆம் தேதி மதுபான பார்களை மூடி அனைத்து கடைகளையும் அரசிடம் ஓப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக பார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு டாஸ்மாா்க் பாா் உாிமையாளர்கள் பார் கட்டிட உாிமையாளர்கள் தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் அன்பரசன் செயலாளர், பாலமுருகன், பொருளாளர் ராமநாதன், ஆகியோர் கலால் பிாிவு உதவி ஆணையாிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது "2004ம் ஆண்டு முதல் டாஸ்மாக் நிறுவனம் தொடங்கிய காலம் முதல் அரசு அனுமதி பெற்று மதுபான மதுகூடம் (பார்) நடத்தி வருகிறோம். 

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலக் கட்டத்தில் நாங்கள் பல கட்டடங்களையும், பொருளாதார ரீதியான பல கட்டங்களையும் அனுபவித்து, அதிலிருந்து இன்று வரையிலும் மீண்டு வரமுடியாத சூழ்நிலையில் உள்ளோம். ஆனால் நாங்கள் மாதம் அரசுக்கு ரூ.1,00,000- (ஒரு லட்சம்) முதல் ரூ.3,50,000- (ரூபாய் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம்) வரை காசோலையாக செலுத்தி வருகிறோம்.

டாஸ்மாக் கடையில் நடக்கும் வியாபாரத்தில் எங்களுக்கு பணம் கட்டுவதற்கு சதவீதம் அடிப்படையில் 1.40 சதவீதம் (பஞ்சாயத்து) முதல் 1.60 சதவீதம் (மாநகராட்சி) வரை என்ற அடிப்படையில் அரசுக்கு பணம் செலுத்தி கடை நடத்தி வருகிறோம். இதில் எங்களுக்கு மதுபானகூடத்தில் 30 சதவீதம் நபர்கள் தான் உள்ளே வருகிறார்கள். பாக்கி உள்ள மீதி நபர்கள் வெளியே கொண்டு செல்கின்றனர். 

அதற்கும் சேர்த்து தான் நாங்கள் பணம் செலுத்திகிறோம். அனைத்து டாஸ்மாக் கடை அருகில் வெளியே பெட்டிகடைகள் நிறைய உள்ளன. அது மினி பார் போலவே செயல்படுகிறது. பலமுறை இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் இதுநாள் வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

டாஸ்மாக் கடைகள் இருக்கும் இடத்திற்கு அரசு மாதம் ரூ.2,500- முதல் ரூ.6,000- வரை வாடகையாக கொடுக்கிறது. ஆனால் நாங்கள் அந்த இடத்திற்கு மதுபான கூட உரிமையாளர் அட்வான்சாக ரூ.2,00,000- முதல் ரூ.5,00,000- வரை கொடுத்து வாடகையாக மாதம் ரூ.1,00,000- முதல் ரூ.1,50,000- வரை செலுத்தி வருகிறோம்.

மேலும் தனிநபர்கள் திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம், கரிக்களம் காலனி, மீன்பிடித் துறைமுகம் போன்ற இடங்களில் எப்போதும் தங்கு தடையின்றி மதுபானங்கள் கிடைக்கின்றன. இவர்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இவர்கள் மதுபாட்டில் விற்பதில் கோஷ்டி பூசல் ஏற்பட்டு அடிதடி தகராறு ஏற்படுகிறது. காவல் நிலையத்தில் பெயர் அளவில் வழக்கு பதிவு மட்டும் செய்யப்படுகிறது.

அரசு ஒப்பந்தத்தில் நிர்ணயித்தபடி ஏற்கனவே டெண்டர்கள் விடப்பட்ட கடைகளில் அரசு நிர்ணயித்த தொகையினை பார்கள் ஏலம் எடுத்து அரசு சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு கடை நடத்தி வருகிறோம். ஆனால் தற்போது சில தனிநபர்கள் எந்தவொரு சட்டத்திற்குட்படாமல் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களை உட்கோட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

ஆனால் மதுபானகூடம் (பார்) நடத்தி வரும் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அரசுக்கு வருவாய் இழப்பு செய்து வருகின்றனர். இதனால் மதுபானகூட உரிமையாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். இப்படியே சென்றால் மதுபானகூட உரிமையாளர்கள் தொடர்ந்து மதுகூடம் நடத்த முடியாத சூழ்நிலைக்கு ஆளாகி விடுவார்கள். 

மேலும், காவல் நிலையங்களில் உயர் அதிகாரிகளின் அழுத்தத்தின் பேரில் புள்ளிவிவர கணக்கிற்காக வழக்கு பதிவு செய்வதற்கு எங்களிடமே ஆட்கள் கேட்கிறார்கள். அரசு விதிகளின்படி உரிய உரிமம் பெற்று அரசுக்கு உரிய நிர்ணயத் தொகையை செலுத்தி மதுகூடம் (பார்) நடத்தும் உரிமையாளர்களை பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ய எத்தனித்து வருகிறார்கள். 

மேற்கண்ட அனைத்து சீர்குலைவையும் சரிசெய்திட கோரி, 18-12-2024 தூத்துக்குடி மாநகரம் மற்றும் புறநகரத்திலுள்ள அனைத்து மதுபானகூடங்கள் (பார்) ஒருநாள் மட்டும் கடைஅடைப்பு செய்தோம் தற்போது 10 ம் தேதி முதல் பார்கள் அடைக்கப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் அரசிடம் ஓப்படைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். உரிய பரிகாரம் வழங்கிட இதன் மூலம் துறை அதிகாரிகளையும் காவல்துறையையும் இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory