» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்கள் தொடர்பு முகாமில் ரூ.33 லட்சம் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
புதன் 12, பிப்ரவரி 2025 8:04:39 PM (IST)

கந்தசாமிபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 135 பயனாளிகளுக்கு ரூ.33,05,650 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம், கந்தசாமிபுரம் கிராமத்தில் இன்று (12.02.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 135 பயனாளிகளுக்கு ரூ. 33,05,650 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசும் போது தெரிவித்ததாவது: இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு திரளாக வந்திருக்கக்கூடிய ஊர் பொதுமக்களே ஊடக நண்பர்களே அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் வாயிலாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மாதந்தோறும் ஒரு கடைக்கோடி கிராமத்தினை தெரிவு செய்து அக்கிராமத்திற்கு அரசு இயந்திரங்கள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அரசுத்துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள், அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான மக்கள் தொடர்பு திட்ட முகாம் தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடி எல்லைப் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய கந்தசாமிபுரம் என்ற ஊரில் இன்று நடத்துகிறோம்.
மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலனை செய்து தகுதியான மனுதாரர்களுக்கு அவர்களுக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு விதமான குறைதீர்ப்பு நடவடிக்கைகளை நமது அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தின கோரிக்கை மனுக்களை பெறக்கூடியது.
கடந்து ஒரு ஆண்டாக நடைபெறக்கூடிய உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தாலுகாவை தேர்ந்தெடுத்து அந்த பகுதியில் உள்ள முக்கிய இடங்களிளெல்லாம் ஆய்வு செய்து அங்கும் மனுக்களை பெறக்கூடிய திட்டம், அதன்பிறகு முதலமைச்சர் அவர்களுடைய ஒரு உன்னத திட்டமான மக்களுடன் முதல்வர் முகாம்களை அமைத்து அதன்மூலம் மனுக்களை பெற்ககூடிய திட்டம்.
இப்படி பல்வேறு வகையான திட்டங்களின் மூலம் மக்களினுடைய கோரிக்கை மனுக்களைப் பெற்று அதற்கான உகந்த தீர்வுகளை நமது அரசுத்துறை அலுவலர்கள் செய்து வருகிறார்கள். இதில் அதிகமான கோரிக்கை மனுக்கள் வரக்கூடிய துறைகளைச் சேர்ந்தவர்கள் விரைவாகவும், சரியான தீர்வும் கொடுக்க வேண்டும். குறிப்பாக வருவாய்துதுறையில் அதிகமான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்கள் அனைத்தையும் வட்டாட்சியர், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகிய அனைவரும் சரியான முறையில் ஆய்வு செய்து உரிய தீர்வுகளை அந்த மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
அதனைடிப்படையில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் 150 பெறப்பட்டு, அவற்றை முழுமையாக பரிசீலனைசெய்து அதில் 126 மனுக்கள் ஏற்பளிக்கப்பட்டு, அதற்குரிய நலத்திட்ட உதவிகள் இன்றையதினம் வழங்கப்படவுள்ளது. தகுதியின்மை காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மனுக்களின் மனுதாரர்களுக்கு எதற்காக மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படும்.
அதன்படி, இன்றையதினம் நடைபெறும் இந்த மக்கள் தொடர்பு முகாமில், வருவாய் துறையின் மூலமாக 33 பயனாளிகளுக்கு ரூ.17,73,040 மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 04 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளும், 21 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் உத்தரவுகளும், 03 பயனாளிகளுக்கு வாரிசு சான்றுகளும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலமாக 14 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், 03 பயனாளிகளுக்கு ரூ.36,000க்கான மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவித்தொகைகளும், 43 பயனாளிகளுக்கு உழவர் அட்டைகளும், கூட்டுறவுத்துறை மூலமாக 02 பயனாளிகளுக்கு ரூ.50,000க்கான சிறு வணிகக் கடனுதவிகளும், 03 பயனாளிகளுக்கு ரூ.75,000க்கான மாற்றுத்திறனாளி கடனுதவிகளும்,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலமாக 3 பயனாளிகளுக்கு ரூ.1,61,610 மதிப்பிலான மண்புழு உரத்தொட்டி, சுழற்கலப்பை, தார்பாயிலின் உள்ளிட்ட இடுபொருட்களும், மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 1 பயனாளிக்கு சுயதொழில் (பல்பொருள் அங்காடி அமைத்தல்) தொடங்குவற்கு ரூ.12 இலட்சத்திற்கான வங்கிக் கடனுதவிகளும், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை மூலமாக 02 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 02 பயனாளிகளுக்கு மருந்துப்பெட்டகங்களும் என மொத்தம் 135 பயனாளிகளுக்கு ரூ.33,05,650/- மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது.
இந்த கந்தசாமிபுரம் ஊராட்சியைப் பொறுத்தவரையிலும் ஒட்டுமொத்தமாக 5 குக்கிராமங்களை அதாவது, கந்தசாமிபுரம், சங்கரப்பநாயக்கன்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, ஜெகவீரபுரம் மற்றும் புதுசின்னையாபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி மொத்தம் 512 குடியிருப்புகள் உள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் முழுமையான குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் விதமாக ஒவ்வொரு வாரமும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கந்தசாமிபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு உள்ளுர் குடிநீர் ஆதாரங்கள் மூலமாகவும், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாகவும் குடிநீர் பகிர்ந்து அளிக்கப்பட்டுவருகிறது. இந்த ஊரானது தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடியில் இருப்பதால் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்மூலமாக வழங்கப்படும் குடிநீர் ஒரு சில நாட்கள் கிடைப்பதில்லை என்ற புகார்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. இதனை மாவட்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்து மொத்த குடிநீர் வழங்குதலில் இருக்கக்கூடிய அனைத்து ஊர்களுக்கும் தினசரி குடிநீர் வழங்க வேண்டும் என்ற ஒரு வழிகாட்டுதலையும், ஒரு வலியுறுத்தலையும் செய்து வருகிறோம். குடிநீர் செல்லக்கூடிய குழாய்களில் ஏதேனும் பழுதுகள் இருக்கும் பட்சத்தில் விரைவில் சரி செய்யப்பட்டு தொடர்ந்து குடிநீர் வழங்குவதை உறுதி செய்யப்படும். உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். உங்களுடைய கோரிக்கைகளை அவர்களிடம் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஊராட்சியில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் இருக்கின்றன. உங்களது சிறு குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைத்து அவர்களுடைய ஊட்டச்சத்தினை உறுதிசெய்து கொள்ள வேண்டும். கர்ப்பிணித் தாய்மார்கள் அவர்களுக்குரிய ஊட்டச்சத்து மாவுகளை எல்லாம் அங்கன்வாடி மையத்தில் இருந்து பெற்று பயன்பெற வேண்டும். உங்கள் வீடுகளில் இருக்கிற எல்லாத் தொட்டிகளையும் முறையாக சுத்தப்படுத்தி குளோரினேஷன் செய்து பராமரிப்பதை உறுதிப்படுத்துங்கள். தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியிலும் சரியான குளோரினேஷன் அளவினை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது தவிர இந்த ஊரில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. தனி நபர் கழிப்பிடம் இல்லாத வீடுகளில் உடனடியாக கழிப்பிடம் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முழுமையான உதவிகளை தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் பெறுவதற்கு ஊராட்சி செயலாளரை அணுகுமாறு உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன். கழிப்பிடம் இல்லாத வீடுகளில் இருந்து திறந்த வழியில் மலம் கழிக்கின்ற போது பல்வேறு விதமான உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும்.
எனவே, தனிநபர் கழிப்பிட வசதி இல்லாத வீடுகள் இந்த ஆண்டு நிறைவதற்குள் தங்களது வீடுகளில் கழிப்பிடங்களை கட்டிக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்கான உதவிகளை செய்வதற்காக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளரை அணுக வேண்டும். இது தவிர இங்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ஓர் வீடு கட்டப்படுகிறது. இந்தg் பணிகளை எல்லாம் வட்டார வளர்ச்சி அலுவலரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் தொடர்ந்து கண்காணித்து இதனை நிறைவேற்ற முழுமையான முயற்சியில் ஈடுபட வேண்டும். ஊராட்சி செயலாளர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக வரக்கூடிய அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்பொழுது ஊராட்சி மன்றத் தலைவர் இல்லாத சூழ்நிலையில் ஊராட்சி செயலாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். இது சம்பந்தமாக ஏதாவது வழிகாட்டுதல் வேண்டுமென்றால் உங்களது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை நீங்க உடனடியாக தொடர்புகொண்டு அந்த பணிகளை எவ்வாறு செய்ய வேண்டுமென்ற ஆலோசனையை பெற்று அதனை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். அரசின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாவட்டத்தினுடைய கடைக்கோடி எல்லையில் இருக்கக்கூடிய இந்த கந்தசாமிபுரம் ஊராட்சிக்கு அனைத்துத்துறை அலுவலர்கள் வருகை புரிந்துள்ளார்கள்.
ஆகையால் இந்த நல்வாய்ப்பினை பொதுமக்களாகிய நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்று மிக தொலைதூரத்தில் இருக்கக்கூடிய கிராமங்களில் அரசின் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக சென்றடைவதை உறுதிசெய்யும் விதமாக அனைத்துத்துறை அலுவலர்களும் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். மக்களிடம் இருக்கக்கூடிய குறைகளைக் கேட்டறிந்து, கொடுக்கக்கூடிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நீங்கள் மனுக்களாக அளிக்கலாம். அதனையெல்லாம் முழுமையாக வரும் நாட்களில் செயல்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம்.
ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள மனுகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளது. தீர்வு செய்ய முடியாதவர்களுக்கான வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பெற்று உரிய முறையில் விண்ணப்பித்து அரசினுடைய அனைத்து நலத்திட்டங்களையும் நீங்கள் பெற்று நல்லபடியாக வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென உங்களை அன்புடன் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட்ஆசிர், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, இணை இயக்குநர் (கால்நடை) சஞ்சீவிராஜ், உதவி ஆணையர் (கலால்) கல்யாணகுமார், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










