» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் தேவாலயங்களில் பிரசன்னத் திருநாள் சிறப்பு ஆராதனை : கிறிஸ்தவர்கள் தீபம் ஏற்றி வழிபாடு!

செவ்வாய் 7, ஜனவரி 2025 3:15:35 PM (IST)



நாசரேத் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பிரசன்ன திருநாளை முன்னிட்டு சிறப்பு தீபம் ஏற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பாலகனாக பாரில் பிறந்ததைக் கொண்டாடும் வகையில் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் மாதம் 25ந் தேதி கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பாலகனாக பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டு கிழக்கு தேசத்தில் இருந்து 3 வானியல் அறிஞர்களான சாஸ்திரிகள் புதிதாக தோன்றிய நட்சத்திரத்தைப் பார்த்து, இயேசு பாலகனாக பிறந்த செய்தியை அறிந்து, அந்த நட்சத்திரம் வழிகாட்டிய திசையில் சென்று இயேசு பாலகனைத் கண்ட சாஸ்திரிகள் பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் ஆகியவற்றைக் காணிக்கையாக படைத்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபுளில் கூறப்பட்டுள்ளது. 

இதை நினைவுகூரும் வகையில் ஜனவரி 6ந் தேதியை புற ஜாதிகளின் கிறிஸ்மஸ் அல்லது பிரசன்னத் திருநாள் என கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் பிரசன்ன திருநாள் ஆராதனை பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் பாடகர் குழுவினர் ஆலயத்தின் உட்புறம் சிறப்பு பாடல்களைப் பாடிக் கொண்டு பவனியாக வந்தனர். ஆலய வளாகத்தில் வாழைத் தண்டுகளின் மேலே நடுப்பகுதியில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டிருந்தது.

நாசரேத்தை அடுத்த அகப்பைக்குளம் தூய அந்திரேயா ஆலயத்தில் +உலக்கைப் பண்டிகை+ என அழைக்கப்படும் பிரசன்னத் திருநாள் சிறப்பு ஆராதனை குருவானவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. பிரசன்ன திருநாளை முன்னிட்டு ஆலய வளாகத்தில் சபை மக்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த உலக்கையை தரையில் நட்டி வைத்து, நடுவில் நெல் குத்துவதற்கு எதுவாக உள்ள குழியில் அரை முறி தேங்காயில் எண்ணெய் ஊற்றி திரி அமைத்து தீபம் ஏற்றி வைத்திருந்தார்கள். 

இதனால் அகப்பைக்குளம் சபை மக்கள் இத் தினத்தை "உலக்கை பண்டிகை" எனக் கூறி வருகிறார்கள். பின்னர் ஆராதனை நிறைவு பெற்றதும் இந்த விளக்குகளில் பயன்படுத்தப்படும் தேங்காய் ஏலம் விடப்பட்டது. அகப்பைக்குளம் சபை மக்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். போலையர்புரத்தில் குருவானவர் மணிராஜ் தலைமையில் பிரசன்னத் திருநாள் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 

இந்த ஆராதனையில் வாழைத் தண்டின் குருத்துப் பகுதியினை எடுத்து தண்டின் மேல், பாதி தேங்காய் வைத்து அதற்குள்ளாக தேங்காய் எண்ணெய் ஊற்றி, சிறிது அரிசியினை துணியில் சுற்றி திரி போன்று அமைத்து தீபம் ஏற்றி வைத்திருந்தார்கள். ஆராதனை நிறைவு பெற்றவுடன் தேங்காய் விளக்குகளை சபை மக்கள் ஏலம் எடுத்துச் சென்றார் கள். இதனால் போலையர்புரத்தில் பிரசன்னத் திருநாள் ஆராதனையை "தேங்காய் பண்டிகை" என்று அழைக்ககிறார்கள்.

மேலும் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகரத் தலைவா் நவராஜ் தலைமையிலும், மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின் தலைமையிலும், திருமறையூா் மறுரூப ஆலயத்தில் குருவானவா் ஜான்சாமுவேல் தலைமையிலும், வாழையடி தூய திரித்துவ ஆலயத்தில் குருவானவா் வெல்ற்றன் ஜோசப் தலைமையிலும்,கடையனோடை சிஎஸ்ஐ ஆலயத்தில் குரு ஆசீா்சாமுவேல் தலைமையிலும் பிரசன்னத் திருநாள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory