» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழிவுமீன் ஆலைகளை மூடும் வரை போராட்டம் தொடரும் - பொட்டலூரணி மக்கள் முடிவு!

சனி 15, ஜூன் 2024 10:36:21 AM (IST)

பொட்டலூரணி பகுதியில் கழிவு மீன் நிறுவனங்களை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மக்களிடம் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியைச் சுற்றியுள்ள கழிவுமீன் நிறுவனங்களை மூடக் கோரி மூன்று ஆண்டுகளாகத் தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி கோட்டாட்சியர் அழைப்பை ஏற்று அப்பகுதிமக்கள் பேச்சுவார்த்தைக்குச் சென்றார்கள்.

அப்போது, கழிவு மீன் நிறுவனங்களை மூட வேண்டும், பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற பொட்டலூரணி மக்கள் கோரிக்கையை முன்வைத்தார்கள். நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைக்கு, கோட்டாட்சியர் அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை என்று பதிலளித்தார். இவ்வளவுதான் வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகியோருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை அறிந்துதான் மாவட்ட ஆட்சியரோடு மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பொட்டலூரணி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஸ்டெர்லைட் போராட்டத்தில் தீவிரவாதிகள் புகுந்துவிட்டார்கள் என்ற தவறான கருத்து எப்படிப் பரப்பப்பட்டதோ அதுபோலவே, பொட்டலூரணி போராட்டத்திற்கும் அப்படி ஒரு பொய்யான பிம்பத்தைக் காவல் துறையினரும் வேறு சிலரும் ஏற்படுத்தத் தொடங்கினார்கள்.

மேற்படி இரண்டு கருத்துக்களையும் உடைப்பதற்காகவே, பொட்டலூரணி மக்கள், 14.06.24 மாலையில், கோட்டாட்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்கள். "எங்கள் பாதை ஜனநாயப் பாதை; அரசியல் சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமைகளைப் பின்பற்றிப் போராடுகிறோம். தடை செய்யப்பட்ட எந்த அமைப்பினரோடும் எங்களுக்குத் தொடர்பு கிடையாது; அதே நேரத்தில் எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஆதரித்து எங்களுக்கு உதவும் அமைப்புகளை நாங்கள் புறந்தள்ள முடியாது. 

காவல்துறையின் அத்துமீறல்கள், அதிகார மட்டத்தின் அத்துமீறல்கள் உள்ளிட்ட, உள்ளே நடப்பதை வெளியில் எடுத்துச் செல்ல ஜனநாயக அடிப்படையில் இயங்கும் அமைப்புகளின் துணை தேவை. அது ஜனநாயகம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமை. "பொட்டலூரணி பொதுமக்கள்" என்ற பதாகையைத் தவிர தனிப்பட்ட முறையில் நாங்கள் எந்த அமைப்பாகவும் செயல்படவில்லை என்ற நமது நடைமுறையைத் தெளிவாக விளக்கினோம்" அது மட்டுமன்றி, "கழிவுமீன் நிறுவனங்களை மூடும் வரையும், பொதுமக்கள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெறும் வரை ஜனநாய வழிப்போராட்டம் தொடரும் " என்றும் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory