» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடம் மாறிய மலட்டாறின் வழித்தடம் குறித்து ஆய்வு : தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!

வியாழன் 13, ஜூன் 2024 10:17:09 AM (IST)தூத்துக்குடி’ காட்டாற்று வெள்ளத்தால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாவதை தடுக்க தொன்மையான தடம் மாறிய மலட்டாறின் வழித்தடம் குறித்து ஆய்வு வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி வலியுறுத்தியுள்ளார். 

தூத்துக்குடியை சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி தனது ‘கீழபட்டிணம்’ (எ) ‘கயல் பட்டிணம்’ தொடர்பான வரலாற்று ஆய்வின் போது பண்டைய துறைமுக நகரங்களின் பட்டியலில் நமது மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் எல்கைக்குட்பட்ட பட்டிணமருதூர் கிராமத்தின் பழைய பெயர் ‘கேரளாந்தகபுரம்’(குரங்குடி நாடு) என்று பதிவேற்றம் ஆகியுள்ளதையும், 9 – 10ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இப்பகுதியில் ‘மலட்டாறு’ என்ற ஆறு நீர் ஆதாரமாக ஓடியுள்ளது என்பதையும் வரலாற்று பதிவுகளில் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார். 

மலட்டாறு என்பது காடுகளில் வேகமாக ஓடுவதும், விரைவில் நீர் வற்றுவதுமான ஆறுகளின் காரணபெயராகும். மேலும் தான் கண்டறிந்த ‘History Of The Military Transactions Of The British Nation In indostan’ என்ற தலைப்பிலுள்ள புத்தகத்தின் 104ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள 1778ம் ஆண்டு திரு.ராபர்ட் ஓரம் என்பவரால் கிழக்கிந்திய கம்பெனிக்காக வரையப்பட்ட வரைபடம் மற்றும் குறியீட்டு விபரங்களை ஆய்வு செய்ததில் செங்கோட்டை பகுதியிலுள்ள வடகரை நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து ஓர் நதியானது கிழக்கு நோக்கி பாய்ந்து தற்போதைய தூத்துக்குடி-தருவைக்குளம் பகுதியில் (8.876872620122752, 78.16841263863124) கடலில் சங்கமம் ஆகியுள்ளதையும், அந்த சங்கம பகுதியில் கடலுக்குள் 3 மணல் திட்டு தீவுகள் இருந்துள்ளதையும், ஆனால் இன்று அருகில் இருந்த முதல் மணல் திட்டானது தற்போதைய கடற்கரை நிலப்பரப்போடு சேர்ந்து விட்டது போல் தென்படுவதாகவும், மற்ற இரு மணல் திட்டுகளும் உருமாறி காணப்படுகின்றன என்றும் தனது புரிதல்களை கருத்துக்களாக பதிவு செய்தார்.

மேலும் தென்காசியின் இலஞ்சி பகுதியில் இருந்து ஆரம்பமாகிய மற்றோரு நதியான ‘சித்தாறு’ சற்று வடகிழக்காக ஓடி முறம்பன் அருகே முதல் நதியோடு இணைந்துள்ளதையும் காணமுடிகின்றது என்றும்(தற்போதும் சங்கம்பட்டி என்ற பெயர் கொண்ட கிராமம் முறம்பன் அருகே உள்ளது குறிப்பிட தக்கது) நீர் மேலான்மை திட்டமிடுதலின் படி இதில் இந்த இலஞ்சியிலிருந்து வரும் சித்தாற்றோடு தாமிரபரணி நதியிலிருந்து ஓர் நதி நீர் இணைப்பு கால்வாய் கங்கைகொண்டான் குளம் வழியாக ஏற்படுத்தப்பட்டிருந்ததை நம்மால் காணமுடிகின்றது என்றும். 

இந்த வரைபடத்தில் தற்போதுள்ள இந்திர குளம்(15-16ம் நூற்றாண்டு - பராக்கிரம பாண்டியன் குளம் - சுமார்1100ஏக்கர் பரப்பளவு) குறிப்பிடப்படவில்லை எனவே இந்த வரைபடம் 12-13ம் நூற்றாண்டினை சார்ந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ((MILITARY TRANSACTIONS) வரைபட ஆவணங்களை ஆதாரங்களாக கொண்டு வரையப்பட்ட வரைபடமாக கருதலாம் என்றும். ஏனென்றால் பொ.ஊ 1311ம் ஆண்டிற்கு பின்தான் இஸ்லாமியர்களின் படையெடுப்பு நமது தென் இந்திய பகுதியில் ஆரம்பம் ஆகியது என்றும் ஆங்கிலேயர்களுக்கு முன்பு 8ம் நூற்றாண்டில் இருந்தே இஸ்லாமியர்கள் அதிக அளவில் வியாபார தொடர்பில் இருந்துள்ளதால் நமது நிலப்பரப்புகளை பற்றி நன்கு அறிந்தவர்கள் ஆவார்கள் என்றும் குறிப்பாக இந்த கீழபட்டிணம் பகுதிதான் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட முதல் வாணிப தளம் ஆகும் என்றும் தனது வரலாற்று புரிதல்களை கருத்துக்களாக பதிவு செய்தார்.

இத்தகைய நதிகளின் இணைப்பு இந்த பட்டிணமருதூர் கடற்கரை வணிக நகர் பகுதியின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை நமக்கு பரைசாற்றுகின்றது என்றும். தான் ஆய்வு செய்ததன் அடிப்படையிலான புரிதலில் மேற்கில் இருந்து வந்த இந்த ஆறானது தொடர் சங்கிலி இணைப்புடன் கூடிய அடுத்து அடுத்து ஊர் கண்மாய்களை நிரப்பி இறுதியாக இந்த கீழபட்டிணம் (எ) கயல்பட்டிணத்தில் (தற்போதைய தருவைக்குளம்) கடலில் சங்கமித்திருக்கவேண்டும என்றும்;. இவ்வாறாக நன்கு பராமரிக்கப்பட் கண்மாய் பாசனம் முறை வாயிலாக நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்து மானாவாரி பயிரிடுதல் முறையில் சிறந்த விவசாய பொருள்களை உற்பத்தி செய்து பாரோர் போற்றிய மிக சிறந்த வணிக நகரான ‘KILPATINAM @ CITY OF CAIL’ என்று விளங்கியுள்ளது என்றும் தனது புரிதல்களை கருத்துக்களாக பதிவு செய்தார்.

பொ.ஊ.1292ம் ஆண்டு இந்தியா வந்து சென்ற திரு.மார்க்கபோலாவினால் உலகின் முதன்மையான செல்வந்தர்கள் வாழும் சொர்க்க பூமி இந்த கீழபட்டிணம் (எ) கயல்பட்டினம் என்று ஆவணப்படுத்தபட்ட நகரம் இது என்பதும், தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் பட்டிணமருதூரில் - மத்திய தொல்லியல்துறையினரால் வணிக நகரத்திற்கு சான்றாக தொன்மையான பலதரப்பட்ட நாகரீக எச்சங்கள், கட்டுமானங்கள், நாணயங்கள், சங்கு ஆபரணங்கள் மற்றும் சிதைவுகள், கல்வெட்டுகள், தெய்வ திருமேனி சிலைகள், தகளி உருளைகள், பீங்கான் சிதைவுகள் போன்றவை முறையாக ஆவணபடுத்தப்பட்டு தொடர் ஆய்வு 04.12.2023 முதல் நடைபெற்று வருகின்றது என்பதையும், இந்த நகரம் எப்பொழுது, எத்தகைய இயற்கை சீற்றத்தால் அழிவுற்றது என்பது குறித்த தகவல் எவரிடம் கிடைக்கப்பெறவில்லை(15ம் நுற்றாண்டில் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் அதிகம்) என்பதையும் குறிப்பிடதக்க கருத்துக்களாக பதிவு செய்தார்.

வரலாற்றில் திரு.கால்டுவெல் மற்றும் திரு.பக்கிள்(மாவட்ட ஆட்சியர்) ஆகியோர் 1866-1868 கால கட்டத்தில் தாமிரபரணிக்கு வடக்கே கயல் என்று சந்தேகப்படும் சிறிய கிராமத்தினை பார்த்ததாகவும், அந்த கிராமம் கடற்கறையில் இருந்து 500மீட்டர் தூரத்தில் இருந்ததாகவும், அங்கு பகுதி இஸ்லாமிய மக்கள் மற்றும் மீனவர்கள் வசித்து வந்ததாகவும், அக்கிராம கடற்கரையின் 2-3 மைல் தூரத்திற்கு மணல் மேடுகளையும், கோட்டை சிதைவுகளையும், புராதன ஆலயங்களை குறிப்பாக ஓர் சிறிய ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தினை பார்த்ததாகவும், அந்த பகுதிகளில் இருந்து ஓர் மாட்டு வண்டி நிறைய மாதிரி சிதைவுகளும், 31 புராதன நாணயங்களும் கண்டெடுத்து ‘மெட்ராஸ் அருங்காட்சியகத்திற்கு’ அனுப்பி வைத்தாக தனது வரலாற்று புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

தற்போதைய பூகோள அடிப்படையில் பார்த்தால் திரு.கால்டுவெல் பதிவு செய்துள்ள அத்தனை அடையாளங்களும், வரலாற்று எச்சங்களும், சின்னங்களும் இந்த பட்டிணமருதூர் கிராமத்தினை குறிப்பது வியப்பின் உச்சமாகும். பட்டிணமருதூர் கிராமத்திற்கு மேற்கே 5.0கி.மீ தொலைவில் உள்ள தெ.க.துரைச்சாமிபுரம் - ஸ்ரீ பெருமாள் ஆலயத்தின் அர்த்த மண்டபத்தின் மேற்கூரையில் இரண்டு கீழ்-மேல் திசையில் செதுக்கப்பட்ட சங்கம குறியீடுகள் காணப்படுகின்றன என்றும் இந்த கோவிலின் காலகட்டம் 12-13ம் நூற்றாண்டினை சார்ந்ததாக தென்படுகின்றது என்றும் இந்த குறியீடுகள் ‘வைப்பாறு’ மற்றும் ‘மலட்டாறு’ ஆகியவற்றின் சங்கமங்களை குறிப்பிட்டவைகளாக இருந்திருக்கலாம் என்றும் தனது சந்தேகத்தினை கருத்துக்களாக பதிவு செய்தார்.

இந்த பகுதிக்கு ஆதாரமாக விளங்கிய இத்தகைய மலட்டாறின் இரு நதிகளின் சங்கமம் தற்போதைய வீரகேரளபுரத்தில் நடைபெற்று பின்பு குப்பாகுறிச்சி வழியாக சீவலப்பேரியில் தாமிரபரணியோடு சங்கமம் ஆகிவிடுகின்றன என்றும் தென்காசி பாண்டியரான-திரு.பராக்கிரம பாண்டியன்தான் பெரிய குளம்(இந்திர குளம்) வெட்டி 15-16 நூற்றாண்டில் நதியின் ஓட்டத்தினை மாற்றியமைத்ததாக வரலாற்றில் பதிவு உள்ளதாக திரு.முத்தலாங்குறிச்சி காமராசு அவர்கள் தனது கருத்தினை தன்னிடம் பதிவு செய்தார்; என்றும் இவ்வாறு செயற்கையாக வழித்தடம் மாற்றியமைப்பதும் விதிமீறல் ஆகும் என்றும் தனது புரிதல்களை கருத்துக்களாக பதிவு செய்தார்.

மேற்கு தொடர்ச்சி மலையின் நான்கு நீர் பிடிப்பில்(சுமார் 1000அடி உயரத்தில் இருந்து) இருந்து வரும் நீரானது இவ்வாறு கங்கை கொண்டான் பகுதியில் ஓன்று சேருதல் என்பது என்றுமே ஆபத்தானது என்றும் குறிப்பாக மலட்டாறின் திசைவேகம் அதிகமாக இருக்கும் என்றும் இத்தகைய உயர் கொள்ளளவு அழுத்தம் என்றாவது ஓர் நாள் மிகப்பெரிய ஆபத்தினை விளைவிக்கும் என்பது தூத்துக்குடி வாசியான தனது ஐயப்பாடாக உள்ளது என்றும் சான்றாக கடந்த 2023ம் ஆண்டு வெள்ளத்தில் அதிக அளவிலான மண் அரிமான சேதாரங்களை இந்த வெள்ளைப்பட்டி – குளத்தூர் வரையுள்ள பகுதியில் நம்மால் காணமுடிந்தது என்றும் இத்தகைய பெருவெள்ளம் குறிப்பாக கங்கை கொண்டானுக்கு கிழக்கே உள்ள முறம்பன் பகுதியில் இருந்து வந்தது என்பது தனது கள ஆய்வின்போது சுற்றுவட்டார கிராம மக்கள் தகவல் தெரிவித்ததாகவும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

இந்த நதியின் பாதை தனது பழைய இயல்பான நிலமைக்கு நாம் கொண்டு வந்தால் இத்தகைய காட்டாற்று வெள்ளம் ஓட்டப்பிடாரம் பகுதியினை செழுமையாக்கி நிலத்தடி நிர் மட்டத்தினையும் நிச்சயம் உயர்த்தி, பாதுகாப்பாக கடலுக்கு சென்றுவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்றும் இத்தகைய வரலாற்று வரைபட குறியீடுகளை தயவு செய்து வரலாறு / தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி இந்த பகுதியின் வரலாற்று உண்மைகளை வெளி கொண்டு வர வேண்டியும் இந்த நதியின் பழைய தடத்தினை மறு சீரமைப்பு செய்திட வேண்டியும் மாவட்ட ஆட்சியரிடம் தான் அளித்த கோரிக்கைகளானது ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது இந்திய தொல்லியல் துறையின் முறையான ஆய்வறிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இது தொடர்பாக மத்திய நதி நீர் மேலான்மை துறையிடமும் (Ministry of Jal Sakthi—Department of Water resources, River development) மின் முகமையில் தனது கோரிக்கைகளை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

நதி நீர் மன்னின் உயிர் நீர் என்பதை கருத்தில் கொண்டு இந்த இயற்கை சீற்றத்தால் பாதிப்படைந்த 45 – 50கிமீ(கங்கை கொண்டான் - தருவைக்குளம்) நீளமுள்ள வழிதடத்தினை முறையாக ஆய்வு செய்து செம்மை படுத்தி எங்கள் பகுதியினை வளமைபடுத்திட உதவிட வேண்டி வரலாற்று மற்றும் தொல்லியல் ஆர்வலர் என்கின்ற முறையில் தனது கருத்துக்களை கோரிக்கைகளாக பதிவு செய்தார்.


மக்கள் கருத்து

RajaJun 14, 2024 - 09:39:06 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி கடல்மட்டத்தில் இருக்கும் ஊர் எனவே தான் நீர் வடிய நேரமாகிறது. கடல் மட்டத்திலிருந்து 20-30 அடி உயர்த்திவிட்டால் வெள்ள பிரச்சினை இருக்காது. கழிமுகத்தில் ஊரை அமைத்துவிட்டு தண்ணீர் வருகிறது என்று சொல்வது என்ன நியாயம்?

RajaJun 14, 2024 - 07:58:55 AM | Posted IP 162.1*****

குட் ஒர்க்

மலர்விழி பிச்சு மணி.Jun 14, 2024 - 06:10:31 AM | Posted IP 172.7*****

இந்த முன்னெடுப்பிற்கும் ஆய்விற்கும்மிக்க நன்றி.மீண்டும் மழை வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கும் நிலை ஏற்படாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SivarajJun 14, 2024 - 12:58:54 AM | Posted IP 162.1*****

புதுக்கோட்டை உப்பாற்று ஓடை பாலம் ஆக்கிறமைப்பு

IrudayajothiJun 13, 2024 - 11:51:03 AM | Posted IP 162.1*****

Government take full care of floodwaterin old properway to reach in sea people also support to our government

muruganJun 13, 2024 - 11:10:33 AM | Posted IP 162.1*****

good one

ஓட்டு போட்ட முட்டாள்Jun 13, 2024 - 10:58:09 AM | Posted IP 172.7*****

திராவிட கட்சிகள் வந்தவுடன் ஆறு , குளம் , குட்டை , ஏரி எல்லாத்தையும் ஆட்டைய போட்டு போய்ட்டாங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory