» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: ஆட்சியர் பங்கேற்பு

புதன் 12, ஜூன் 2024 12:11:47 PM (IST)



தூத்துக்குடியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (12.06.2024), குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் துறையின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தொடர்ந்து, விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி நகரின் பிற பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பெட்ரோல் வழங்கும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முன்னிலையில் குழந்தைத் தொழிலாளர் அகற்றுதலுக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டு நிறுவன உரிமையாளர்களால் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தூத்துக்குடி நகரப்பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எந்தவிதமான பணியிலும், 18 வயதிற்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியிலமர்த்தக் கூடாது. அவ்வாறு பணியிலமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் ரூ.50,000/- வரை அபராதமோ 6 முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களை எவரேனும் பணியிலமர்த்தியிருந்தால் அது குறித்த விவரத்தினை குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்பு உதவி எண்.1098 என்ற எண்ணிற்கு அழைக்குமாறும் அல்லது மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்திலுள்ள 0461-2340443 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்கள்.

முன்னதாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மின்னல்கொடி , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory