» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் உரிமம் வழங்கும் விழா!

செவ்வாய் 11, ஜூன் 2024 5:30:56 PM (IST)தூத்துக்குடியில் டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சார்பில் பயிற்சியளிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் உரிமம் வழங்கும் விழா நடைபெற்றது.

பதினான்கு கடலோர மாவட்டங்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு, கடல் மீன்பிடிப்பில் இந்தியாவில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 6000 த்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இப்படகுகளை இயக்கும் மீனவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி தங்களுடைய அனுபவ அடிப்படையில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை மற்றும் இராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் அமைந்துள்ள கடல்சார் பயிற்சி இயக்குனரகமும் இணைந்து கடந்த 2019 ம் ஆண்டிலிருந்து "படகு இஞ்சின் பராமரித்தல், பழுதுபார்த்தல் மற்றும் மாலுமிக்கலை” பற்றிய ஒருவார காலப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. 

இப்பயிற்சிகள் தமிழக அரசின் "ஆழ்கடல் மீன்பிடிப் பயிற்சி மையங்களை நிறுவுதல்” எனும் திட்டத்தின் கீழும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடனும் மொத்தம் 450 மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயிற்சியளிக்கப்பட்ட மீனவர்களில் இதுவரை சுமார் 66 மீனவர்கள் படகு ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர். இம்மீனவர்கள் 24 மீட்டர் ஒட்டு மொத்த நீளத்திற்கும் குறைவான நீளம் கொண்ட 240 குதிரைத்திறனுக்கு குறைவான இயந்திரம் பொறுத்தப்பட்ட படகுகளை இயக்க உரிமம் பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் 11.06.2024 அன்று காலை 10:.30 மணியளவில் "படகு ஓட்டுநர் உரிமம்”; வழங்கும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 34 விசைப்படகு மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கு தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப. அகிலன் தலைமையேற்றார்.

மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர், நீ. நீதிச்செல்வன, பேராசிரியர் ந.வ. சுஜாத் குமார், கடல்சார் பயிற்சிக் கழகத்தின் முதல்வர் கேப்டன் ஜே. மோகன்குமார் மற்றும் தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் உதவி இயக்குநர் தி. விஜயராகவன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துரை வழங்கியதோடு படகு ஓட்டுநர் உரிமங்களை வழங்கினர்.

மீன்பிடித் தொழில் நுட்பம் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் ச. மாரியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார், உதவிப் பொறியாளர் அ. அந்தோணி மிக்கேல் பிரபாகர்; நன்றியுரை வழங்கினார். த. பச்சையப்பன், வி. மௌலின் சந்திரா, திரு ப. மரிய அந்தோணி சுதாகர், வே. இராஜூ, சத்யராஜ், முதுநிலை மாணவி எமிமா ஆகியோர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர். ஆராய்ச்சி மாணவி சே. அர்ச்சனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory