» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லையில் விவசாயம் செழிக்க உதவிய யூசுப் கான்: தஞ்சை கருத்தரங்கத்தில் தகவல்!

புதன் 17, ஏப்ரல் 2024 7:40:15 PM (IST)தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்ட மற்றும் முதுகலை மாணவர்களுக்கான 2 நாள் கருத்தரங்கம் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் சார்பில் நடைபெற்றது. 

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் இந்த கருத்தரங்கை தொடங்கிவைத்து உரையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழக முதுகலைத் தொல்லியல் மாணவர்களும், 24 மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் மாணவர்களும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். இவர்கள் தங்கள் புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகளை கட்டுரையாக வாசித்தனர். இவர்களுடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் மதிவாணன் கலந்து கொண்டார்.

இந்தக் கருத்தரங்கை தமிழ்ப் பல்கலைக்கழக் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை தலைவர் வீ.செல்வகுமார் ஒருங்கிணைத்து நடத்தினார். கட்டுரை வாசித்த மாணவர்களை மாணவியர்க்கு ஆலோசனை கூறினார். சில வாரங்களுக்கு முன்னர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவி ஆஸ்லின் காருண்யா மற்றும் சுபாஷிணி திருநெல்வேலி மாவட்டம், தருவையில் உள்ள தடுப்பணையில் ஒரு கல்வெட்டை கண்டறிந்தனர். 

இந்த மாணவிகள் தான் கண்டறிந்ததை ஆராய்ச்சி கட்டுரையாக இந்த கருத்தரங்கில் வாசித்தனர். இந்த கல்வெட்டு 1760 ஆம் ஆண்டில் ”அசாது மம்மது இசபு கான் பாதா சாயபு” என்பவர் இந்த தடுப்பணையைக் கட்டியதாக விளக்குகிறது. அசாது மம்மது இசபு கான் பாதா சாயபு என்பவர் மருதநாயகம் எனப்படும் யூசுப் கான் அவர்களைக் குறிக்கலாம் எனத் தொல்லியல் அறிஞர்கள் கூறினார்கள். 

யூசுப் கான் 1759 முதல் 1764 வரை மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்டப் பகுதியை ஆட்சி செய்தார். இவரது ஆட்சியில் மதுரையின் பல்வேறு பகுதிகள் தழைத்தோங்கியது என்று தொல்லியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். விவசாயத்திற்காக நீர்நிலைகளை சீரமைப்பது வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து மதுரை நகரை பலப்படுத்தினார். 
 
இதுபோல தருவை தடுப்பனையைக் கட்டி திருநேல்வேலி பகுதியில் விவசாயம் செழிக்க பெருமளவில் உதவியுள்ளார் எனத் தெரிகிறது. யூசுப்கான் 1764 ஆம் ஆண்டு அக்டோபர் 15 நாள் மதுரை அருகே உள்ள சம்மட்டிபுரத்தில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டத் தொல்லியல் மாணவிகள் ஆஸ்லின் காருண்யா மற்றும் சுபாஷிணியை தொல்லியல் பேராசிரியர்களும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை தலைவர் (பொறுப்பு) சி. சுதாகர் மற்றும் துணைவேந்தர் சந்திரசேகர் அவர்களும் பாராட்டினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory