» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இடுக்கன் களைவோம் திட்டத்திற்கு நிதி வழங்கிய நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!
திங்கள் 4, மார்ச் 2024 5:02:48 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் இடுக்கன் களைவோம் திட்டத்திற்கு நிவாரண தொகை வழங்கிய நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றுகள், மழைவெள்ளத்தில் மடிக்கணினி சேதமடைந்த 49 மாணவர்களுக்கு மடிக்கணினி ஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் உருவாக்கப்பட்ட இடுக்கன் களைவோம் என்ற இணைய வழி திட்டத்தில் பெறு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி மூலம் நன்கொடையாக நிதி பெறப்பட்டு அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது தேவைக்கேற்ப உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த இடுக்கன் களைவோம் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து மழை வெள்ளத்தால் சேதமடைந்த 49 கல்லூரி மாணவ, மாணவியர்களின் மடிக்கணிகளுக்கு பதிலாக புதியதாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
மேலும், இடுக்கன் களைவோம் திட்டத்திற்கு நிவாரண தொகை ரூ.2,58,000/-வழங்கிய திருப்பூர் பிராய்லர் ஒருங்கிணைப்புக்குழு, கோவில்பட்டி தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், கோவில்பட்டி லிபர்ட்டி தீப்பெட்டி நிறுவனம், சங்கரன்கோவில் நிஜாம் தீப்பெட்டி நிறுவனம், கடலையூர் மகேஷ் தீப்பெட்டி நிறுவனம், கோவில்பட்டி போப் அரசர் தீப்பெட்டி நிறுவனம், கழுகுமலை தனலட்சுமி தீப்பெட்டி நிறுவனம், கோவில்பட்டி விஸ்வநாத் தீப்பெட்டி நிறுவனம், கோவில்பட்டி கடலையூர் தீப்பெட்டி நிறுவனம், கோவில்பட்டி தி காமரின் தீப்பெட்டி நிறுவனம், கடம்பூர் ராஜாராம் தீப்பெட்டி நிறுவனம், கோவில்பட்டி காமாட்சி தீப்பெட்டி நிறுவனம், பழம்கோட்டை ஸ்ரீ கண்ணன் தீப்பெட்டி நிறுவனம், துறையூர் லைட்வி தீப்பெட்டி நிறுவனம், ரூ.10,00,000/- வழங்கிய சென்னை ஆரம் ஐ.ஏ.எஸ். அகாடமி, ரூ.8,00,000/- வழங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகம், தூத்துக்குடி ஆகிய நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் பணியாற்றி பணியிடக்காலமான 6 சத்துணவு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை ஆகியவற்றை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வகுமார், ஆகியோர் உள்ளனர்.