» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அஞ்சல் அலுவலகம் ₹15,081 இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!!
வெள்ளி 1, மார்ச் 2024 8:05:42 PM (IST)
சேவைக் குறைபாடு காரணமாக அஞ்சல் அலுவலகம் 15,081 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
திருநெல்வேலி நகரம் ரகுமத் நகரைச் சார்ந்த சந்திரமோகன் என்பவர் ஒரு பொறியியல் பட்டதாரி. தனது வேலை சம்மந்தமான தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்களை திருநெல்வேலி பாளையங்கோட்டை அஞ்சல் அலுவலகத்தின் பதிவு தபால் மூலமாக புது டெல்லிக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அந்த இரு தபால்களும் குறிப்பிட்ட முகவரிக்கு சென்று சேரவில்லை. இதனால் புகார்தாரர் வேலைக்கான தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து விட்டார்.
இது தொடர்பாக பல முறை அஞ்சல் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார். மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பதில் கேட்டுள்ளார். பல நாட்களாகியும் முறையான பதில் வராததால் மன உளைச்சலுக்கு ஆளான சந்திரமோகன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் திருநெல்வேலி மாவட்டநுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்பு இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் தபால் அனுப்புவதற்கு செலுத்தப்பட்ட கட்டணமான ரூபாய் 81, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூபாய் 10,000 மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூபாய் 5,000 ஆக மொத்தம் ரூபாய் 15,081 ஐ இரு மாத காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.