» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதல் தமிழ் அச்சு நூல் தூத்துக்குடியின் பங்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
வெள்ளி 23, பிப்ரவரி 2024 7:46:55 PM (IST)
தமிழின் முதல் அச்சு நூல் வெளியாக காரணமாக இருந்தது தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் தான் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பண்டைய கால தமிழ் இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் தான் எழுதப்பட்டன. காகிதத்தில் அச்சடிப்பது என்ற முறை வந்த பிறகு தமிழ் மொழியிலும் அச்சிடல் அறிமுகமானது. இது பெரும்பாலும் மதப் பிரச்சாரத்துக்காக இந்தியா வந்திருந்த கிறிஸ்தவத் துறவியர்களின் முயற்சிகளால் நடந்தது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி செய்த போது, இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவச் சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை எனப் பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக் கலை மந்தமாகவே வளர்ந்தது. இதனால் பெருமளவான இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயிருக்கலாம். இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்டவைதான்.
முதல் தமிழ்ப் புத்தகம் 1554 பிப்ரவரி 11 ஆம் நாள் போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகரான லிஸ்பனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு எனும் மூவர். இவர்கள் தமிழ் அறிந்த இந்தியர்கள். முத்துக்குளித்துறை என்றழைக்கப்பட்ட தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilhalingoa Tamul e Portugues) (தமிழில்: "தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு”) என்னும் தலைப்பில் அந்த நூல் வெளியானது. அந்த நூலில் தமிழ்ச்சொற்கள் லத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோர்க்கப்பட்டிருந்தன.
இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல்; இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்து மாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று செக்கோஸ்லேவேகியாவின் தமிழ் அறிஞர் கமில் சுவெலபில் குறிப்பிடுகிறார்.
இது குறித்து, தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்தான பதிலுரையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஐரோப்பாவிற்கு வெளியே அச்சடிக்கப்பட்ட முதல் நூல் தமிழில்தான் வெளி வந்தது. 1554ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் தேதி போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் கார்டிலா என்ற தலைப்பில், 38 பக்கங்கள் கொண்ட ஒரு சிறு தமிழ் நூல் அச்சிடப்பட்டது. வருடம் 1554. அந்த நூல் அச்சடிக்கப்பட்ட காலத்தில் உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் பிறந்திருக்கவில்லை.
இந்தியாவிலே பேரரசர் அக்பர் தி கிரேட் என்றழைக்கப்பட்ட மகா அக்பர் அரியணையில் ஏறியிருக்கவில்லை. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து ஐம்பது ஆண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை. உலக வரலாற்றில் மாபெரும் அறிவியல் மேதைகள் கலிலியோ, நியூட்டன் இரண்டு பேரும் அப்போது பிறந்திருக்கவில்லை. இந்த தமிழ் புத்தகம் அச்சிடப்பட்டு நூறாண்டுகள் கழித்துதான் உலக அதிசயமான தாஜ்மஹால் யமுனை ஆற்றங்கரையிலே எழுப்பப்பட்டது.
இந்த நூல் வெளிவந்து பல ஆண்டுகளுக்கு பின்புதான், ரஷ்ய, சீன, ஜப்பான் மொழிகளிலே அச்சு நூல்கள் வெளிவந்தன. இந்த வரலாற்றுக் குறிப்பிலே ஒரு முக்கியமான செய்தி இடம் பெற வேண்டுமென்பதிலே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த நூல் வெளிவருவதற்கு உதவியாக இருந்தவர்கள் நம்முடைய தமிழ்நாட்டின் தூத்துக்குடியைச் சார்ந்த மூன்று தமிழர்கள்.
அவர்களது பெயர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ, தோமா த குருசு இந்த மூன்று தமிழர்கள் முயற்சியால்தான் 1554ஆம் ஆண்டு முதல் தமிழ் நூல் வந்திருக்கிறது. எனவேதான் இந்த வரலாற்றுப் பின்புலத்தில்தான் தமிழுக்கான முதல் அச்சுநூல் முதற்கொண்டு அரிய ஆவணங்கள் மின்பதிப்பு செய்வதற்காக அரசு நிதியினை ஒதுக்கியிருக்கிறது.” இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.