» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவிக்க வேண்டும் : அமைச்சர் பி.கீதாஜீவன்
திங்கள் 2, அக்டோபர் 2023 4:56:15 PM (IST)

எந்தவொரு கோரிக்கையாக இருந்தாலும் மக்கள் பிரதிநிதிகளிடமும், அரசு அலுவலர்களிடம் எடுத்துக்கூறி பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்று அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்.
உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 155ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று (02.10.2023) விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இக்கிராமசபைக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல்ஜீவன் இயக்கம், சமூக தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் வில்வமரத்துப்பட்டி ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. ஊராட்சிகளிலேயே வளர்ச்சி திட்டப்பணிகளை படிப்படியாக மேற்கொள்வதற்காக இந்த கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவாக்கப்பட்ட தினத்தில் இருந்து தொடர்ச்சியாக கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் 15வது நிதிக்குழுவில் இருந்து இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 240 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் ஊராட்சிகளுக்கு நிதி அதிகளவில் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதுபோல பேரூராட்சி மன்றத்தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்;கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் இருந்தால்தான் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்ட பணிகள் நடைபெறும். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் எச்.சி.எல் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 44 ஊராட்சிகளையும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 51 தத்தெடுத்து, 95 ஊராட்சிகளுக்கும் தேவையான குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வில்வமரத்துப்பட்டி ஊராட்சியில்; தையல் மையத்தினை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பித்து உரிமைத்தொகை இதுவரை யாருக்கெல்லாம் வரவில்லையோ, இதுவரைக்கு எந்தவொரு குறுஞ்செய்தியும் வராதவர்கள் வருகின்ற அக்டோபர் 18ம் தேதி வரை எந்தவொரு இ சேவை மையத்தின் மூலமும் பிங் கலர் அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றை கொண்டு சென்று மேல்முறையீடு செய்யலாம்.
மேலும், குழந்தை உண்டான தாய்மார்கள் கட்டாயமாக 5வது மாதம் ஸ்கேன் எடுக்க வேண்டும். குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி உள்ளிட்ட உறுப்புகளின் வளர்ச்சிகள் பற்றி மருத்துவர்கள் கூறுவார்கள். இதனால் தகுதியான, ஆற்றல்மிக்க, ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும். பிள்ளைகள் அறிவாற்றல் உள்ள பிள்ளைகளாக இருக்க வேண்டுமென்றால் கருவுருவானதில்இருந்து சத்தான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்து இரண்டரை வயது வரை குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் எடை குறைவாக இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல வேண்டும். எந்த பிரச்சனை என்றாலும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சிறு வயதிலேயே கண்டறியும்பட்சத்தில் அதனை குணப்படுத்துவது மிக எளிது. இதனால் உயிரிழப்பில் இருந்து தவிர்க்கலாம். குழந்தைகளை கண்காணியுங்கள், ஆண் பிள்ளைகளாக இருந்தாலும், பெண் பிள்ளைகளாக இருந்தாலும் தொடர்ந்து கண்காணியுங்கள். நமது பிள்ளையை நாம்தான் நல்வழிப்படுத்த முடியும்.
18 வயதுக்கு பிறகு திருமணம் செய்துகொள்ளுமாறு சமூக நலத்துறையின் மூலம் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்கள். பொதுமக்களாகிய உங்களுக்கு எந்தவொரு கோரிக்கையாக இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர், பேரூராட்சி மன்றத்தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், ஊராட்சிமன்றத் தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும், அரசு அலுவலர்களிடம் எடுத்துக்கூறி பயன்பெற வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
பின்னர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருட்களையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, வில்வமரத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ர்ஊடு நிறுவனத்தின் மூலம் மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டுவரும் தையல் மையத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தையல் தொழில் செய்துவரும் பெண்களிடம் கலந்துரையாடினார்கள்.
மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் , மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத் தலைவர் அயன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, திட்ட இயக்குநர் (த.மா.ஊ.வா.இ) வீரபுத்திரன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஷ்டி பாய், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், வில்வமரத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சின்னப்பொண்ணு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா
திங்கள் 11, டிசம்பர் 2023 8:26:00 PM (IST)

தூத்துக்குடி அருகே காரில் கடத்தி வந்த 540 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
திங்கள் 11, டிசம்பர் 2023 7:54:54 PM (IST)

பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 11, டிசம்பர் 2023 5:16:35 PM (IST)

மசாலா பாக்கெட்டில் வண்டுகள்: இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
திங்கள் 11, டிசம்பர் 2023 4:59:32 PM (IST)

காவலர் பயிற்சி பள்ளியில் இறுதித் தேர்வு: எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு
திங்கள் 11, டிசம்பர் 2023 4:51:53 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.3 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு!
திங்கள் 11, டிசம்பர் 2023 4:11:34 PM (IST)
