» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம்: ரணில் உடன் சந்திப்பு!

வியாழன் 20, ஜூன் 2024 4:47:12 PM (IST)இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்றுள்ளார். இதனையடுத்து தற்போதைய ஆட்சியில் முதல் முறையாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று காலை இலங்கை தலைநகர் கொழும்பு சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை வெளியுறவுத் துறை துணை அமைச்சர் தாரக பாலசூரிய, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மேலும் தமிழ்நாட்டு மீனவர்கள் விவகாரம், இலங்கையில் இந்திய நிறுவனங்களின் முதலீடு உள்ளிட்டவை தொடர்பாகவும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்ல இருக்கிறார். 3-வது முறை பிரதமரான பின்னர் இலங்கைக்கு முதல் முறையாக நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் இலங்கை அரசுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை பயணம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின்போது,​​இந்திய - இலங்கை உறவுகளில் மூன்று மைல்கற்கள் எட்டப்பட்டன. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜெய்சங்கர் கூட்டாக இணைந்து நிகழ்நிலை ஊடாக திறந்துவைத்தனர்.

கொழும்பு, திருகோணமலை ஆகிய நகர்களிலுள்ள மாதிரிக் கிராமத்திலும் 24 வீடுகள் மெய்நிகர் ஊடாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. 6 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் நினைவுப் படிகம் திறக்கப்பட்டது. 

கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் துணை மையம், காலி, அருகம்பே, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய பிரதேசங்களின் ஆள்ளில்லா கட்டுப்பாட்டு மையங்களும் அடங்கும். இவ்வாறு இலங்கை ஜனாதிபதி அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory