» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷிய அதிபர் புதின் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வட கொரியா சுற்றுப் பயணம்!

புதன் 19, ஜூன் 2024 11:40:03 AM (IST)ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பியாங்கியோங்கு விமானநிலையத்தில் நேற்று நள்ளிரவு (இந்திய நேரப்படி) வந்திறங்கிய புதினை வடகொரிய அதிபர் கிங் கிம் ஜோங்-உன் வரவேற்றார் என ரஷிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. புதினை வரவேற்று தலைநகர் பியாங்கியோங்கில் அவரின் புகைப்படங்கள், அந்நாட்டு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

முன்னதாக, ரஷியாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். உக்ரைன் - ரஷியா இடையே போர் தொடரும் நிலையில், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் அவரது திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த 2 நாள் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகொரியாவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக, உக்ரைன் போரில் அந்த நாடு தங்களுக்கு ஆதரவு அளித்தமைக்கு புதின் நன்றி தெரிவித்தார். இது குறித்து வட கொரியாவின் அரசு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் புதின் தெரிவித்துள்ளதாவது: உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு ஆதரவு தெரிவித்துள்ள வட கொரியா மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

ரஷியா மீதும் வட கொரியா மீதும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை இரு நாடுகளும் தொடர்ந்து உறுதியாக எதிர்க்கும். உலக அரசியல் ஒருதலைபட்சமானதாக இருக்கவேண்டும் என்பதற்காக மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை ரஷியாவும் வட கொரியாவும் கூட்டாக எதிர்க்கும். அனைத்து நாடுகளும் நீதிக்கு பரஸ்பரம் மதிப்பளிக்கும் பன்முகத்தன்மை கொண்டதாக உலக அரசியலை மாற்ற பாடுபடுவோம்.

தற்போது சர்வதேச வர்த்தம் மற்றும் பணப் பரிவர்த்தனையை மேற்கத்திய நாடுகள்தான் கட்டுப்படுத்தி வருகின்றன. அந்த நிலையை மாற்றி, மேற்கத்திய நாடுகளால் கட்டுப்படுத்த முடியாத வர்த்தக மற்றும் பரிவர்த்தனைக் கட்டமைப்பை ரஷியாவும் வட கொரியாவும் கூட்டாக உருவாக்கும். இது தவிர, சுற்றுலா, கலாசாரம், கல்வி ஆகிய துறைகளிலும் இரு நாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவோம் என்று அந்தக் கட்டுரையில் புதின் தெரிவித்துள்ளார்.

வட கொரியா புறப்படுவதற்கு முன்னதாக, கிழக்கு ரஷியாவிலுள்ள யாகுட்ஸ் நகருக்குச் சென்ற விளாதிமீர் புதின், உக்ரைன் போரில் பயன்படுத்தப்படும் தொழிலகப் பொருள்களுக்கான கண்காட்சியைப் பார்வையிட்டார்.வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கும் ஏவுகணை திட்டங்களுக்கும் எதிராக அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

அதே போல், உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஈரான் மற்றும் வட கொரியாவுடன் ரஷியா ஒத்துழைப்பை மேம்படுத்திவருகிறது. இந்த விவகாரத்தில் உலகின் மிகப் பெரிய ராணுவ மற்றும் பொருளாதார சக்திகளில் ஒன்றான சீனாவும் ரஷியாவின் பக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு வட கொரியாவும் ஈரானும் ஆயுத உதவிகளை அளிக்கின்றன| ரஷியாவின் ஆயுத உற்பத்தித் திறனை மேம்படுத்தும் பொருள்களை சீனா அனுப்புகிறது என்று அமெரிக்காவும் குற்றஞ்சாட்டிவருகிறது. இந்தச் சூழலில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வட கொரியாவுக்குச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory