» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 எல்.பி.ஜி. சிலிண்டர்கள்: மக்களின் விபரீத செயலுக்கு எச்சரிக்கை!

வெள்ளி 10, ஜூலை 2026 8:52:22 AM (IST)

மும்பையை ராய்காட் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுமார் 3,000-க்கும் மேற்பட்ட எல்.பி.ஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்கள் எடுத்து பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மும்பையை அடுத்துள்ள ராய் காட் மாவட்டத்தில் பெய்து வரும் அதிபலத்த கனமழையால் பாதாளகங்கா ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திற்குச் (HPCL) சொந்தமான எரிவாயு சிலிண்டர் நிரப்பும் ஆலையின் சுற்றுச்சுவர் வெள்ள பாதிப்பினால் இடிந்து விழுந்தது. இதனால் ஆற்று வெள்ளம் ஆலைக்குள் புகுந்ததில், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000-க்கும் மேற்பட்ட எல்.பி.ஜி. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

ஆற்றில் ஆயிரக்கணக்கான சிலிண்டர்கள் மிதந்து வருவதைப் பார்த்த கரையோர கிராம மக்கள், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்று வெள்ளத்தில் இறங்கி அவற்றை போட்டி போட்டுக்கொண்டு தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராய்காட் மாவட்ட கலெக்டர் கிஷான் ஜவாலே பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 சிலிண்டர்களில் பலவற்றில் முழுமையாக எரிவாயு நிரப்பப்பட்டுள்ளது என்றும், அவை ஆற்றுப் பாறைகளில் மோதி சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளதால் எரிவாயு கசிவு ஏற்பட்டு எந்த நேரத்திலும் வெடிக்கும் பேராபத்து உள்ளது என்றும் எச்சரித்துள்ளார். எனவே பொதுமக்கள் யாரும் அந்த சிலிண்டர்களைத் தொடவோ, வீடுகளுக்கு எடுத்துச் செல்லவோ கூடாது என்றும், ஏற்கனவே எடுத்துச் சென்றவர்கள் உடனடியாக உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து, ஆற்று வெள்ளத்தில் மிதக்கும் சிலிண்டர்களைப் பத்திரமாக மீட்கும் பணியில் எச்.பி.சி.எல். நிறுவன ஊழியர்களும், பேரிடர் மீட்புக்குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory