» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சி.பி.எஸ்.இ., நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

ஞாயிறு 7, ஜூன் 2026 9:20:58 AM (IST)

சி.பி.எஸ்.இ., நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

உச்ச நீதிமன்றத்தில் போலி தொழில்முறைப் பட்டங்கள் மற்றும் இணைய விமர்சனம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின் போது, சில வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் அமைப்பின் விமர்சகர்களைக் கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் இளைஞர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனை மராட்டிய மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த அபிஜித் தீப்கே (30) என்ற இளைஞர் நையாண்டியாக எதிர்கொண்டார். அந்த வார்த்தையை வைத்தே 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் ஒரு தளத்தை உருவாக்கி மீம்ஸ்களைப் பதிவிடத் தொடங்கினார். இதற்கு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து, சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் இணைந்தனர். இதன் காரணமாக அந்த வலைத்தளங்கள் முடக்கப்பட்டாலும், இளைஞர்கள் ஆங்காங்கே கரப்பான் பூச்சி முகமூடிகளை அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கினர்.

முன்னதாக, ஜந்தர் மந்தரில் நேற்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி பெறும் நடவடிக்கைகளைக் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ், விஜேதா தஹியா ஆகியோர் மேற்கொண்டனர். அமெரிக்காவிலிருந்த கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, ஆர்ப்பாட்ட நாளில் டெல்லி விமான நிலையம் வந்திறங்கினார்.

நேற்று காலை வரை இப்போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காததாலும், தொடக்கத்தில் கூட்டம் கூடாததாலும் பலரும் இதைக் கிண்டலாக விமர்சித்தனர். ஆனால், அபிஜித் தீப்கே வந்திறங்கிய அடுத்த சில நிமிடங்களில், நாடாளுமன்ற தெரு போலீசார் மாலை 5 மணி வரை ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை முறைப்படி அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் சில மணி நேரத்திலேயே திருநங்கைகள், பெண்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரைக் கொண்ட பெருங்கூட்டம் திரண்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் பலர் கரப்பான் பூச்சி படம் போட்ட முகமூடிகளை அணிந்து வினோதமாகத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்திய அபிஜித் தீப்கேவுக்கு ஆதரவாகப் பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக்கும் இப்போராட்டத்தில் நேரில் பங்கேற்றுத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட முயன்ற சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த 'கரப்பான் பூச்சி' ஆர்ப்பாட்டம் தேச நலனுக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அக்கட்சி மீது போலீசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இக்கட்சியினரின் இந்த வினோதப் போராட்டம் நேற்று டெல்லியில் பெரும் பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory