» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போட்டித் தேர்வுகளை கண்காணிக்க உயர்மட்ட குழு: மத்திய அரசு உத்தரவு!

சனி 22, ஜூன் 2024 5:31:01 PM (IST)

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வுகளைக் கண்காணிக்க 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) நடத்தப்படும் ஆட்சேர்ப்புத் தேர்வுகள், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட், ஜேஇஇ, கியூஇடி, நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளைத் தடுக்க "பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பான மசோதா கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்த சட்டத்தை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு நேற்று அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் படி நீட் தேர்வு உள்ளிட்டவைகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு குறைந்தபட்சம் ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வுகளைக் கண்காணிக்க உயர்மட்டக் குழுவை அமைத்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் ராமமூர்த்தி, டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் இந்த குழுவில் உறுப்பினராக இடம்பெற்றுள்ளனர்.

வெளிப்படையான, சுமூகமான மற்றும் நியாயமான முறையில் தேர்வுகள் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேர்வு செயல்முறையில் சீர்திருத்தம், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் இந்த உயர்மட்ட குழு பரிந்துரை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அறிக்கையை 2 மாதங்களுக்குள் இந்த குழு, மத்திய கல்வி அமைச்சகத்திடம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors








Thoothukudi Business Directory