» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு நீட் மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை தகவல்

வியாழன் 13, ஜூன் 2024 12:50:56 PM (IST)

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. 

கடந்த 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. மே 5-ம் தேதி நடைபெற்ற நடப்பு ஆண்டுக்கான இளங்கலை மருத்துவம் பயில்வதற்கான நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தத் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மாணவர்கள் 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றனர். 

ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முழு மதிப்பெண் பெற்றது, நடைமுறைச் சாத்தியம் இல்லாத வகையில் சிலருக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது எனப் பல அம்சங்கள் நீட் தேர்வு நடத்தப்படும் முறை மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியன. இதோடு வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற விடுமுறை கால இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா இணைந்து விசாரித்தனர். தேர்வை ரத்து செய்வது, மறுதேர்வு மற்றும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை ரத்து செய்வது குறித்த மூன்று மனுக்கள் விசாரிக்கப்பட்டன. முன்னதாக, கலந்தாய்வு நடத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விளக்கத்தை தேசிய தேர்வு முகமை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதன்போது தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேஷ் கவுசிக், "1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும். இதற்கு அறிவிப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாகும். மறுதேர்வு ஜூன் 23-ம் தேதியும், அதன் முடிவுகள் 30-ம் தேதியும் வெளியாகும்” என தெரிவித்தார். அப்போது, கலந்தாய்வு பணிகள் பாதிக்கப்படாத வகையில் மறுதேர்வை விரைந்து நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், 1,563 பேருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, அவர்களது அசல் மதிப்பெண் விவரம் வெளியிடப்படும். அந்த முடிவுடன் கலந்தாய்வில் பழைய தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் பங்கேற்பது அல்லது மறுதேர்வை எதிர்கொள்வது குறித்த முடிவை தேர்வர்கள் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த மறுதேர்வு வரும் ஜூன் 23-ம் தேதி நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் ஜூன் 30-ம் தேதி அன்று வெளியாகிறது. இதனை தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory