» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலகம்: பிரதமர் நரேந்திர மோடி தரிசனம்
புதன் 17, ஏப்ரல் 2024 4:58:09 PM (IST)
அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம் விழும் காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இணையவழியில் பார்வையிட்டார்.
நாடு முழுவதும் ராம நவமி இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம் விழும் கண்கொள்ளா காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இந்த விடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. இந்த நிகழ்வின்போது கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராம ராம என்ற கோஷத்துடன் அரிய நிகழ்வை தரிசித்தனர்.
இந்த காட்சியை ஊடகங்கள் வாயிலாகவும் ஏராளமான ராம பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.இது குறித்து அஸாமில் தேர்தல் பிரசாரத்தில் உள்ள பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நல்பாரி பேரணிக்குப் பிறகு பால ராமரின் சூரிய திலகத்தை தரிசித்தேன். கோடிக்கணக்கான இந்தியர்களைப் போல. இது எனக்கு உணர்ச்சிமிக்க தருணம். அயோத்தியில் ராம நவமி வரலாற்று சிறப்புமிக்கது. இந்த சூரிய திலகம் நம் அனைவரின் வாழ்விலும் ஆற்றலை கொண்டு வரட்டும் மற்றும் தேசத்தைப் புகழின் உச்சிக்குக்கொண்டு செல்லட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.