» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போராட்டத்தில் விவசாயி மரணம்: கொலை வழக்காக பதிவு செய்தது பஞ்சாப் போலீஸ்

வியாழன் 29, பிப்ரவரி 2024 12:53:36 PM (IST)

விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி சுப்கரண் சிங் மரணத்தை கொலை வழக்காக பஞ்சாப் போலீஸ் பதிவு செய்துள்ளது. 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அரியானா, பஞ்சாப் மாநில எல்லைகள் மூடப்பட்டு, விவசாயிகள் டெல்லி நோக்கி செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

கடந்த 21-ந்தேதி பஞ்சாப்- அரியானா எல்லை கனாரி பகுதியில் தடுப்புகளை தாண்டி விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது பஞ்சாப் எல்லைக்குள் புகுந்து அரியானா போலீசார் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் சுப்கரண் சிங் என்ற 21 வயது இளம் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அதேவேளையில் 12 பாதுகாப்பு போலீசாரும் காயம் அடைந்தனர்.

சுப்கரண் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுப்கரண் சிங் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை அவரது உடலை அடக்கம் செய்யமாட்டோம் என அறிவித்தனர்.

இந்த நிலையில் ஒருவாரம் கழித்து நேற்றிரவு போலீசார் கொலை வழக்கு உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரியானாவின் சிந்து மாவட்டத்தில் உள்ள கார்கி என்ற இடத்தில் சம்பவம் நடைபெற்றதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுப்கரண் சிங் மரணம் அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியதுடன், அவரது தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி சுப் கரண் சிங்கின் உடலுக்கு விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory