» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் பழைய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர்: சஞ்சய் ரெளத்
வியாழன் 29, பிப்ரவரி 2024 11:47:59 AM (IST)
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் பழைய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரை நடத்துவோர் என்று சிவசேனை (உத்தவ் தாக்கரே) மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் அரசில் வேளாண் அமைச்சராக இருந்த சரத் பவார், விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்து சிவசேனை (உத்தவ் தாக்கரே) மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் பேசியது: பிரதமர் நரேந்திர மோடி 2024 தேர்தலில் 400 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்பதற்கு பதிலாக 600 என்ற இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இந்திய வேளாண் அமைச்சர்களில் சிறந்தவர் சரத் பவார் என்று பிரதமர் மோடியே ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.” எனத் தெரிவித்தார். மேலும், "புதிய நாடாளுமன்றம் 5 நட்சத்திர சிறை போன்றது, அங்கு வேலை செய்ய முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரை நடத்துவோம்.” என்றார்.