» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41பேர் மீட்பு: 17 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது!!

புதன் 29, நவம்பர் 2023 10:22:38 AM (IST)உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளா்களும் 17 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு நேற்று இரவு பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. முதல்கட்டமாக ஜேபிசி இயந்திரம் மூலம் மணல் குவியலை அகற்றும் முயற்சி தோல்வி அடைந்தது.

இரண்டாம் கட்டமாக சில்க்யாரா முனையில் இருந்து மணல் குவியலின் பக்கவாட்டில் ராட்சத இயந்திரங்கள் மூலம் துளையிடப்பட்டன. ஆனால் சுமார் 5-க்கும் மேற்பட்ட ராட்சத இயந்திரங்கள் தோல்வியடைந்த நிலையில் அமெரிக்க தயாரிப்பு இயந்திரம் மட்டும் தொடர்ந்து துளையிட்டு முன்னேறியது. ஆனால் 47 மீட்டர் துளையிட்ட நிலையில் அந்த இயந்திரமும் உடைந்தது.

இந்த சூழலில் டெல்லியில் இருந்து 24 ‘எலி வளை' சுரங்க தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அமெரிக்க இயந்திரம் 47 மீட்டர் துளையிட்ட நிலையில் மீதமுள்ள 13 மீட்டர் தொலைவை கை வேலைப்பாடாக துளையிட ‘எலி வளை' தொழிலாளர்கள் கடந்த திங்கள்கிழமை இரவு களமிறங்கினர். அசூர வேகத்தில் இயங்கிய அவர்கள் 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவு சுரங்கம் தோண்டி இரும்பு குழாய்களை வெற்றிகரமாக பொருத்தினர். இதன்மூலம் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.

2.5 குவின்டால் சிறப்பு டிராலி ‘எலி வளை' சுரங்க தொழிலாளி ராகேஷ் ராஜ்புட் கூறியதாவது: பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொள்வோம். எனவே கடந்த திங்கள்கிழமை இரவு பணியை தொடங்கியதில் எங்களுக்கு எவ்வித சிரமமும் இல்லை. எங்களது குழுவில் டிரில்லிங், கட்டர்ஸ், வெல்டர்ஸ் என அனைத்து வகையான தொழிலாளர்களும் உள்ளனர்.

சில்க்யாரா சுரங்கப் பாதையில் 800 மி.மி. விட்டம் கொண்ட குழாயில் நுழைந்து சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டோம். இதைவிட குறுகலான குழாய்களில் நுழைந்துகூட பணி செய்திருக்கிறோம். சில்க்யாரா சுரங்கப் பாதையில் ஒருவர் தோண்ட, மற்றொருவர் மணல் குவியலை அள்ளினார். 3-வது நபர் சிறப்பு டிராலியில் மணலை நிரப்பினார். இந்த சிறப்பு டிராலியை நாங்களே உருவாக்கி பயன்படுத்தி வருகிறோம். இதில் 2.5 குவின்டால் எடையுள்ள பொருட்களை நிரப்ப முடியும். 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்துக்குள் 13 மீட்டர் தொலைவுக்கு சுரங்கத்தை தோண்டுவோம் என்று அதிகாரிகளிடம் வாக்குறுதி அளித்திருந்தோம். அதைவிட குறைவான நேரத்தில் சுரங்கத்தை தோண்டி குழாய்களை பொருத்திவிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்றொரு ‘எலி வளை' சுரங்க தொழிலாளி சாம்பு கூறும்போது, ‘‘அமெரிக்க இயந்திரம் மூலம் சுமார் 5 நாட்களில் 47 மீட்டர் தொலைவுக்கு இரும்பு குழாய் அமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவுக்கு சுரங்கத்தை தோண்டிவிட்டோம்.

செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் தொழிலாளர்கள் இருக்கும் இடம் வரை சுரங்கத்தை தோண்டி முடித்தோம். அங்கு சிக்கியிருந்த தொழிலாளர்கள் எங்களது முகங்களைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களது மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு அளவே இல்லை’’ என்றார்.

அமெரிக்காவின் 25 டன் ஆகர் இயந்திரம், ராட்சத துளையிடம் இயந்திரங்கள் செய்ய முடியாத சவால் நிறைந்த பணியை, மிக எளிதாக செய்து முடித்த ‘எலி வளை' சுரங்க தொழிலாளர்கள் உலகம் முழுவதும் ஒரே நாளில் ஹீரோவாக கொண்டாடப்படுகின்றனர்.

தடை செய்யப்பட்ட ‘எலி வளை’ நடைமுறை: 

வடகிழக்கு மாநிலங்களில் ‘எலி வளை' சுரங்கம் தோண்டுவது சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மேகாலயாவில் ‘எலி வளை' சுரங்கம் தோண்டி நிலக்கரியை வெட்டி எடுப்பது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

மேகாலயாவின் ஜெயந்தியா மலைப் பகுதியில் பக்கவாட்டிலும், மேற்பகுதிகளில் இருந்தும் 4 அடி அகலத்தில் சுமார் 100 அடி ஆழம் வரை சுரங்கம் தோண்டி நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. மூங்கில் ஏணி வழியாக தலையில் டார்ச் விளக்கு, கையில் சிறிய இயந்திரம் அல்லது கோடாரியுடன் உள்ளே நுழையும் தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி கூடையில் அள்ளி வருகின்றனர். இந்த சட்டவிரோத ‘எலி வளை' சுரங்கங்களால் இதுவரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இதன்காரணமாக கடந்த 2014-ம் ஆண்டில் ‘எலி வளை' சுரங்க நடைமுறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது. ஆனால் மேகாலயா, மணிப்பூர் மாநிலங்களில் இன்றளவும் சட்டவிரோதமாக ‘எலி வளை' சுரங்கங்கள் தோண்டப்பட்டு நிலக்கரி வெட்டப்பட்டு வருகிறது.

சில கட்டுமான நிறுவனங்கள் தங்களது திட்டப் பணிகளுக்காக ‘எலி வளை' சுரங்க தொழிலாளர்களைப் பயன்படுத்தி வருகின்றன. உத்தராகண்ட் சுரங்கப் பாதை மீட்புப் பணியில் இக்கட்டான சூழல் எழுந்ததால், தடை செய்யப்பட்ட ‘எலி வளை' சுரங்க நடைமுறை பயன்படுத்தப்பட்டதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.மீட்புப் பணிகளின் இறுதிக் கட்டத்தில், உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி சம்பவ இடத்துக்கு வருகை தந்து குழாய் பதிக்கும் பணிகளைப் பாா்வையிட்டாா். மீட்கப்படும் தொழிலாளா்களை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில், மழை காரணமாக சேதமடைந்த சாலைகள் செப்பனிடப்பட்டன.

‘வெளிச்சம்’ கண்ட 41 தொழிலாளா்கள்: ஆகா் இயந்திரத்தின் தோல்வியைத் தொடா்ந்து, கிடைமட்டமாக குழாய் செலுத்தும் மீட்புத் திட்டத்தில் எலிவளை சுரங்க முறை பணியாளா்கள் குழுவினா் மேற்கொண்ட இறுதிக்கட்டப் பணிகளில் 60 மீட்டா் தொலைவுக்கு துளையிடப்பட்டு, குழாய் செலுத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை இரவு முழுமையாக நிறைவடைந்தன.

முன்னதாக, மீட்புக் குழாயில் தொழிலாளா்களைக் காயமின்றி பாதுகாப்பாக அழைத்துவர மெத்தைகள் நிறுவப்பட்டன. அந்தக் குழாய்க்குள் நுழைந்த தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா், தொழிலாளா்களை 2-3 நிமிஷங்கள் இடைவேளையில் ஒருவா் பின் ஒருவராக அழைத்து வந்தனா். அவா்களை முதல்வா் புஷ்கா் சிங் தாமியும், மத்திய இணையமைச்சா் வி.கே.சிங்கும் கட்டித் தழுவி வரவேற்றனா்.

சுரங்கப் பாதைக்குள் பணியமா்த்தப்பட்டிருந்த மருத்துவக் குழு, மீட்கப்பட்ட தொழிலாளா்களுக்கு முதல்கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, சில்க்யாரா சுரங்கப் பாதை பகுதியிலிருந்து 30 கி.மீ. தொலைவில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 41 படுக்கைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவசரகால ஊா்திகள் மூலம் அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட தொழிலாளா்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனனா். சுரங்கப் பாதையில் இருந்து தொழிலாளா்கள் வெளியேறியத் தொடங்கியதும், சம்பவ இடத்தில் கூடியிருந்த உறவினா்கள், மீட்புப் பணியாளா்கள், பொதுமக்கள் கரகோஷம் எழுப்பி தொழிலாளா்களை வரவேற்றனா். மேலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள் அனைவருக்கும் தொழிலாளா்களின் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

குடியரசுத் தலைவா், பிரதமா் மகிழ்ச்சி

சுரங்க இடிபாடுகளிலிருந்து தொழிலாளா்கள் மீட்கப்பட்டதையடுத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தனா். இந்த சவாலான நேரத்தில் தொழிலாளா்களின் குடும்பங்கள் காட்டிய பொறுமையையும் தைரியத்தையும் பாராட்ட வாா்த்தைகள் இல்லை என்றும், மீட்புக் குழுவிருக்கு பாராட்டுகளையும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory