» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.5% ஆக உயர்வு: வீடு, வாகன கடனுக்கான வட்டி உயருகிறது!

புதன் 8, பிப்ரவரி 2023 12:16:07 PM (IST)

ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர்  சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்கள் கொண்ட நிதிக்கொள்கைக் குழு கடந்த 2 நாட்களாக மும்பையில் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையின் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ ரேட் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடனுக்கான வட்டி 6.50 சதவீதமாக உயர்கிறது. 

கடந்த 3 ஆண்டுகளாக உலகளவில் ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வுகள், உலகளவிலான நிதிக்கொள்கைகளுக்கு பரிசோதனையாக அமைந்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், மற்றும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துதல் ஆகிய இரு அம்சங்களுக்கு இடையே வளரும் சந்தையைக் கொண்ட பொருளாதார நாடுகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டன. உலகப் பொருளாதாரச் சூழல் சில மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல் இப்போது மோசமாகத் தெரியவில்லை, முக்கியப் பொருளாதார நாடுகளில் வளர்ச்சி வாய்ப்புகள் மேம்பட்டுள்ளன. அதே சமயம் பணவீக்கம் இலக்கை விட அதிகமாக உள்ளது

2023-24ம் ஆண்டின் 4வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். 2023-24ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும். இதன்படி முதல் காலாண்டில் 7.8 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 6.2 சதவீதமாகவும், 3வது காலாண்டில் 6 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கிறோம். நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.5 சதவீதமாகவே இருக்கும். சில்லறை பணவீக்கம் 2023-24ம்ஆண்டில் 5.3 சதவீதமாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்" என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்

முன்னதாக நாட்டின் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்தையும் கடந்து 10 மாதங்களாக அதிகரித்தது. இதையடுத்து, கடந்த மே மாதத்தில் இருந்து ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. 2022 மே மாதம் கடனுக்கான வட்டி 4 சதவீதமாக இருந்தநிலையில் ஒராண்டில் 2.5 சதவீதம் உயர்ந்து தற்போது 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் ரிசர்வ் வங்கி வட்டியை 35 புள்ளிகள் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. ரெப்போ கடன் வட்டி விகிதம் உயர்வால் வீடு மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதம் மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory