» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
திருக்குறளை புனித நூலாக அறிவிக்க வலியுறுத்தி மாணவர்கள் சாதனை முயற்சி!
புதன் 28, பிப்ரவரி 2024 5:47:01 PM (IST)
திருக்குறளை புனித நூலாக அறிவிக்க வலியுறுத்தி விளாத்திகுளத்தில் 1330 அஞ்சல் அட்டைகளில் திருக்குறள் எழுதி அனுப்பி பள்ளி மாணவர்கள் சாதனை முயற்சி மேற்கொண்டனர்.
உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு அஞ்சல் அட்டைகளில் திருக்குறள் எழுதி தனது முகவரிக்கு அனுப்புமாறு உலகச் சாதனையாளர் செ.வெங்கடேசன் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், புதூர் ஒன்றியம், வௌவால் தொத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர் சே.வினோத் தலைமையில், வேலூர் முத்தமிழ்ச் சங்கமம் உறுப்பினர் கவிஞர் மை.சத்திய பாரதி மேற்பார்வையில் 1330 அஞ்சல் அட்டைகளில் திருக்குறளை எழுதி "உலக தாய்மொழி தின சாதனை" என அடுக்கி வைத்தனர்.
மேலும் இந்த அஞ்சல் அட்டைகளை உலகச்சாதனையாளர் செ.வெங்கடேசன்-க்கு முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் 6ம் வகுப்புமுதல் 8ம் வகுப்புவரை படிக்கும் 34 மாணவர்கள் அதிகஅளவு பங்களிப்பு செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 1330 அஞ்சல் அட்டைகளை தாங்கள் எழுதியது மட்டுமில்லாமல் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடமும் சென்று சேகரித்தனர். இவர்களின் இந்த சீரிய முயற்சி தனிச் சாதனையாகவும் அங்கீகரிக்கப்பட உள்ளது.
இச்சாதனை முயற்சியை மேற்கொண்ட செ.வெ ரெகார்டு ஹோல்டர் போரம் நிறுவனர் உலகச் சாதனையாளர் செ.வெங்கடேசன், வேலூர் முத்தமிழ்ச் சங்கமம் நிறுவனர் சி.கலைவாணி மற்றும் பல்லடம் முத்தமிழ்ச் சங்கமம் நிறுவனர் த.அருணா தேவி ஆகியோர் பாராட்டினர்.