» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சச்சின் சாதனையை சமன் செய்தது சிறப்பான விஷயம்’ - விராட் கோலி

செவ்வாய் 7, நவம்பர் 2023 12:15:25 PM (IST)

எனது ஹீரோவான சச்சின் சாதனையை சமன் செய்தது சிறப்பான விஷயம் என  விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார். தனது 35-வது பிறந்த நாளில் சதம் விளாசிய விராட் கோலி, அதிக சதங்கள் விளாசிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை சமன் செய்தார்.

இதைத் தொடர்ந்து விராட் கோலிக்கு பாராட்டுகள் குவிந்தன. சச்சின் டெண்டுல்கரும் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் விராட் கோலிக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். சச்சின் தனது பதிவில், "சிறப்பாக விளையாடினீர்கள் விராட் கோலி. நான் 49-ல் இருந்து 50-க்கு (சதம்) செல்வதற்கு 365 நாட்கள் தேவைப்பட்டன. ஆனால் நீங்கள் 49 என்ற சதத்திலிருந்து 50-வது சதத்துக்கு இன்னும் சில நாட்களில் செல்வீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருந்தார்.

போட்டி முடிவடைந்ததும் சாதனை சதம் குறித்து விராட் கோலி கூறியதாவது: எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்தது சிறப்பான விஷயம். பேட்டிங் என்று வரும் போது சச்சின் கச்சிதமாக செயல்படுவார். ஆனால் நான், அவரை போன்று ஒருபோதும் இருக்கப் போவது இல்லை. இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம், நான் எங்கிருந்து வருகிறேன் என்று எனக்குத் தெரியும். சச்சினை நான், டிவியில் பார்த்த நாட்கள் எனக்குத் தெரியும், அவரிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவதில் நிறைய அர்த்தங்கள் உள்ளது.

நான் கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன். இதை கடவுள் எனக்கு வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். களத்தில் பல ஆண்டுகளாக நான் செய்ததை தற்போதும் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்,தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டம் பெரிய போட்டி. அவர்கள், இந்தத் தொடரில் வலுவான அணியாக இருந்தார்கள். இதுவே சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. என் பிறந்த நாளில் இந்த சதம் அமைந்ததால் இதை எனக்கு ரசிகர்கள் சிறப்பாக்கியுள்ளனர்.

வெளியில் இருந்து பார்ப்பவர்கள் விளையாட்டை சற்று வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாகத் தொடங்கும் போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதாக நினைக்கிறார்கள்.ஆனால் நிலைமைகள் அதன் பின்னர் வெகுவாக மாறியது. 315 ரன்களுக்கு மேல் சென்றதும், சராசரிக்கும் அதிகமான ரன்களை பெற்றதாக உணர்ந்தோம். இவ்வாறு விராட் கோலி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory